பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலுக்குத் தேவை 43

நம்பி அங்கே கிடந்த மேஜையின் முன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்த போது அவள் அதை விரும்பாதவளாய், அவனை சீக்கிரம் அனுப்பிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு, பேசினாள், 'சித்ரா வர நேரம் ஆகும். நீ ஏன் அவளுக்காகக் காத்திருக்கிறே! அவள் யாருடனோ போயிருக்கிறாள்.'

நம்பியின் கண்கள் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல கவர்களையும், அருகில் கிடந்த திருமண அழைப்பு இதழ்களையும் கவனித்தன. மேலோட்டமாகப் பார்த்ததிலேயே, சித்ராவுக்குத்தான் கல்யாணம் என்பது தெரிந்துவிட்டது. மணமகன் பெயர் ராமநாதன் என்றிருந்தது.

நம்பிராஜனுக்கு அது ஒரு அதிர்ச்சியாகத்தான் அமைந்தது. எனினும் அவன் சித்ராவின் தாயாரிடம் எதுவும் பேசவிரும்பவில்லை. அவன் உள்ளம் திடீரென வறண்டு விட்டது போல் தோன்றியது. தனது நோட்டில் எதையும் எழுதி வேண்டும் என்ற எண்ணம் இனி அவனுக்கு என்றுமே எழாது என்று அவனுக்கு நிச்சயமாகத் தோன்றியது.

கடைசியாக அவனுக்கு ஒளிவெட்டுப் போல் எண்ணம் பிறந்தது. அவன் தன்னோடு கொண்டு வந்திருந்த நோட்டில் முகப்பில் எழுதினான். 'என் வாழ்வில் சிறு நேர வசந்தமாக வந்து வறண்ட கோடையாகி விட்ட சித்ராவுக்கு அன்புக் காணிக்கை - நம்பிராஜன்' இதை எழுதியதும், அந்த நோட்டை மேஜைமீது, கல்யான அழைப்புகளோடு சேர்த்து வைத்து விட்டு அவன் புறப்பட்டான்.

அவன் வெளியே வந்ததும், வீட்டின் முன் ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. மிடுக்காக உடை அணிந்திருந்த நவ யுவன் ஒருவன் ஓட்டி வந்த அதில் அவன்மீது சாய்ந்தபடி காட்சி அளித்தது சித்ரா தான். அவள் அவன் பக்கம் பார்வையைத் திருப்பிய போதிலும், அவனைப் பாராதது போலவே நடந்து கொண்டாள். அவசியமில்லாமல் கலகலச் சிரிப்பு சிதறியவாறே கீழே குதித்தாள். அந்த வாலிபன் மீது சாய்ந்து ஒட்டிக் கொண்டே நடந்தாள், அவன் தான் மாப்பிள்ளை என்று தோன்றியது.

அவள் மிகவும் சந்தோஷம் பெற்றவளாகவே காட்சி அளித்தாள். அது நம்பிராஜன் இதயத்தில் வேதனை உணர்வையே கிளறியது. அவளை கூப்பிடாமலே நகர்ந்து விடலாமா என்று எண்ணினான் அவன். அதற்கும் மனம் வரவில்லை. 'சித்ரா' என்று கூவினான்.

சித்ரா திரும்பிபி பார்த்தாள். அவனை அறியாதவள் போல் துணைவனோடு போனாள்.