பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 வல்லிக்கண்ணன் கதைகள்

ஒடி வந்திட்டே? அப்புறம் தகவல்கூட தெரிவிக்கலியே? நாங்கள்ளாம் உனக்கு என்ன துரோகம் செய்தோம்னு கேட்டேன். மாமா, முதல்லே சாப்பிடுங்க. நம்ம கதையை சாவகாசமாப் பேசிக்கலாம்னான். தடபுடலா உபசரிச்சான். ஸ்பெஷல் ரவா தோசை, பொங்கல் வடைன்னு ஏகமா கவனிப்பு. பணம் வாங்கமாட்டேன்னுட்டான்.

நீங்க இன்னிக்கு நம்ம விருந்தாளி. ரெண்டு முனு நாளு வேணுமின்னாலும் நம்ம வீட்டிலே தங்கலாம்னான். சொந்த ஓட்டலு, சொந்த வீடு, நல்ல மனைவி, குழந்தைன்னு வசதியா இருக்கான்.”

'அது சரி, அவன் ஏன் ஊரை விட்டுப் போனானாம்? என்று குறுக்குச்சால் ஒட்டியது ஒரு அவசரம்.

'அதைத்தான் சொல்ல வாறேன். பக்கத்து டவுணிலே அவனுக்குத் தெரிஞ்ச ஒருவர் மதராசிலேயிருந்து வந்திருந்தாராம். அவரைப் பார்த்துப் பேச இவன போனானாம். அப்படியே அவரு கூடவே பட்டணத்துக்குப் போயிட்டானாம். சினிமாவிலே நடிக்க வாய்ப்பு தேடலாம்னு நினைச்சானாம். அவன் நினைத்தது நடக்கலே. கொம்பங்குளம் திரும்பவும் மனசில்லே. ஊர் சுற்றியா திரிஞ்சிருக்கான். நம்ம ஊருக்கு கொடை சமயத்திலே எப்பவோ வந்த ஒருவர் அவனை மதுரையிலே கண்டுக்கிட்டார். அவரோட ஊருக்கு அழைச்சுக்கிட்டுப் போயிருக்காரு. அவரோட கிளப்புக் கடையிலேயே அவனுக்கு வேலையும் கொடுத்திருக்கார். கேஷியர் வேலை. அங்கேயே இருந்து அந்த ஒட்டலுக்கு முதலாளி ஆயிட்டான். அது எப்படீன்னா, அவரு வீட்டோட அவரு மக ஒருத்தி விதவைப் பொண்ணா இருந்திருக்கா. அவளை நம்ம சிங்காரம் மறுமணம் செய்துக்கிட்டான். அவன் நினைச்சபடி சினிமா ஹீரோ ஆகலைன்னாலும், சமூக சீர்திருத்த ஹீரோ ஆகிவிட்டான். கலப்புத் திருமணம், விதவை மறுமணம் என்று இரண்டையும் ஒரே சமயத்திலே செய்திருக்கானில்லே!”

பெரியவர் பேசி நிறுத்தினார். 'சிங்கார வேலு நம்ம ஊருப் பக்கம் வரமாட்டானாமா?” என்று கேட்டார் ஒருவர். . . .

"அவன்கிட்டே கேட்டேனே. சொன்னான். வரணும் மாமா. நம்ம ஊரையும் நம்ம ஆட்களையும் மறக்க முடியுமா? எல்லாரும் என் கண்ணுக்குள்ளேயே நிக்கிறாக. எல்லோரையும் தேடத்தான் செய்யுது. ஒரு கொடை சமயத்திலே கட்டாயம் வருவேன்னு சொன்னான்" என்றார் அவனைக் கண்டு வந்தவர்.