பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினைத்ததை முடிக்காதவர் 49

'மடையன்! ஒரு லெட்டராவது போட்டிருந்திருக்கலாம்’ என்று அலுத்துக் கொண்டான், சிங்காரத்தின் முன்னாள் சிநேகிதன் ஒருவன்.

("குங்குமச் சிமிழ்', 1996)


வானத்தை வெல்பவன்


ண்ணாடி முன்நின்ற சிங்காரம் மார்பை நிமிர்த்திக் கொண்டான். கைகளை உயர்த்தியும் தாழ்த்தியும், மூச்சை உள்ளுக்கிழுத்தும் நீளமாக வெளியிட்டும், தன் அழகைத் தானே பார்த்து மகிழ்ந்தான். தலையை ஆட்டினான். முகத்திலே ஒரு சிரிப்பைப் படரவிட்டான்.

"தம்பி சிங்காரம்! நீ சாமானியன் இல்லை. அரும்பெரும் சாதனைகள் புரியவந்தவன். வானமே எல்லை. அதை எட்டிப் பிடிப்பது அல்ல. உன் நோக்கம். அதை வெல்வதே நம் குறிக்கோள்" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

இப்படி தன்னம்பிக்கை ஊட்டிக் கொள்வது தான் ஒவ்வொரு நாளும் சிங்காரம் செய்கிற முதல் வேலை ஆகும்.

சிங்காரம் தோற்றத்தில் சாதாரணன்தான். ஆனால், அவன் மனம் மற்றவர்களின்றும் மாறுபட்டது. எல்லோரையும் விடத்தான் தனித்தன்மை உடையவன் என்று அவன் எண்ணினான். இவர்களை எல்லாம் விட நான் உயர்ந்தவன் என்று அவன் மனம் மந்திரம் உச்சரிப்பது போல் எப்பவும் முனகிக் கொண்டேயிருக்கும்.

அவன் ஒரு லூஸ், அரைக்கிறுக்கு, ஒரு மாதிரிப் பேர் வழி என்று மற்றவர்கள் அவனை மதிப்பிட்டார்கள். அவனைப் பரிகசிக்கவும் செய்தார்கள். சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் மட்டம் தட்டி மகிழ்ந்தார்கள்.

மடையர்கள், மண்ணாந்தைகள், மக்குப் பிளாஸ்திரிகள், மழுங்கடிக்கப்பட்டவர்கள் என்று மற்றவர்களைப் பற்றி மனசுக்குள் திட்டித் திருப்தி கொள்வான் சிங்காரம்.

ஒருநாள் வரும் அப்போது இவர்கள் அறிவார்கள் இந்த சிங்காரம் யார் என்பதை. இதுவும், அவன் தனக்குத் தானே உரம் ஏற்றிக் கொள்வது தான்.