பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 வல்லிக்கண்ணன் கதைகள்

"சே, என்ன செய்வது? வானமே எல்லை. அதை வென்றாக வேண்டுமே!" என்று சிங்காரம் ஏக்கத்தோடு பேசினான்.

"ஒண்னு செய்யி. கோபுரத்து மேலே ஏறி நின்று, உன்னை விட்டேனா பார் என்று கூவிக்கொண்டு மேலே நோக்கிப் பாய்த்து பார்” என்று கெண்டை பண்ணினான் நண்பன்.

சிங்காரம் பேசாமல் அவனை விட்டுப் பிரிந்தான். என்ன செய்வது? பெரிதாக என்னவாவது செய்தாக வேண்டுமே! என்னதான் பண்ணுவது? இதுவே அவனது மனக்குமைச்சலாகி விட்ட எந்நேரமும். -

இதே நினைப்பாக ரோடில் நடந்து கொண்டிருந்தான் சிங்காசம்.

அபூர்வமான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அப்போது. ஒரு குதிரை வெறிபிடித்தது போல் நடுரோடில் வேகமாக ஓடிவந்தது. யாருடைய குதிரையோ, கட்டிலிருந்து விடுபட்டு, தலைதெறிக்கிற வேகம் என்பார்களே அப்படி வந்தது. லாடம் கட்டிய அதன் கால்கள் கற்களில் பட்டு தீப்பொறி கிளப்பின. ஜனங்கள் மிரண்டு பயந்து ஒரங்களில் ஒதுங்கினார்கள். "ஏஏய், வெறிபுடிச்ச குதிரை... வழிவிட்டு விலகி நில்லுங்க...!" என்று கத்தினார்கள் பலர். குதிரையை மடக்கிப் பிடிக்க பின்னே சிலர் ஓடிவந்தார்கள்.

சிங்காரத்தினுள் உற்சாகம் கரை புரண்டது. இந்தக் குதிரையோடு போட்டி போட்டு ஒடனும். குதிரையை விட வேகமாக ஒடிக்காட்டனும் என்ற எண்ணம் அவனுள் கிளர்ந்தெழுந்தது.

குபீரெனப் பாய்ந்து குதிரையின் பக்கத்திலேயே ஓடலானான் சிங்காரம். மூச்சுப் பிடித்து வேகம் வேகமாக ஒடிக்கொண்டேயிருந்தான்.

இது மற்றவர்களுக்கு நல்ல வேடிக்கைக் காட்சி ஆயிற்று. ஒஒ எனக் கூச்சலிட்டும், கைதட்டியும், வாயினால் சீட்டி அடித்தும், கைகளை வீசியும் அவரவர் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள்.

இதனால் குதிரைக்கு மிரட்சி ஏற்பட்டது. பக்கத்தில் ஓடி வருபவன் தன்னை அடக்கிப் பிடிக்கவே வருகிறான் என்று ஆதறகு தோன்றியிருக்க வேண்டும். அது வெகுண்டு திரும்பி சிங்காரத்தைத் தாக்கியது. காலால் ஓங்கி எற்றியது.

அப்பாவி சிங்காரம் அதிர்ச்சியோடு கீழே விழுந்தான். ஆவனை மிதித்துக் கொண்டு திரும்பிய குதிரை வந்த வழியே திரும்பி ஓடலாயிற்று.