பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊரும் ஒருத்தியும் 55

உயர்ந்த ஷூ மாட்டிக்கொண்டு, பவுடரும் ஸெண்டும் பூசி, ஜம்மென்று இருக்க வேண்டும் தன் கணவன் என்று அவள் ஆசைப்பட்டாள். அவை அவனுக்கு உவப்பான விஷயங்களாக இல்லையே.

ரஞ்சிதம் அவ்வாறு அலைகிற ஸ்டைல் ஆசாமிகளை விழி அகலப் பார்த்தாள். டவுனிலிருந்து அப்படி யாராவது வந்தால், அவர்களோடு பேச்சுக் கொடுத்து, சினிமாக்கள் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினாள்.

'ரஞ்சிதம், நீ இருக்கிற அழகுக்கு நீ இருக்க வேண்டிய இடம் சினிமா உலகம்தான். உனக்கு சுலபமா சான்சு கிடைக்கும், நான் அதுக்கு ஏற்பாடு செய்கிறேன்னு ஒருத்தரு சொன்னாரு. ஆள் ஜோரா இருப்பாரு. எங்க வீட்டுக்கு மூன்றாவது வீட்டிலே இருந்த வக்கீலுக்கு உறவு. பட்டனத்திலேயிருந்து வந்து பத்து நாள் தங்கியிருந்தாரு. பட்டணத்தைப் பத்தியும், சினிமா படம் பிடிக்கிறவங்க, அதிலே நடிக்கிறவங்க பத்தியும் நிறைய நிறையச் சொன்னாரு. சிரிச்சு சிரிச்சுப் பேசுவாரு. ரொம்ப நல்லவரு. அடுத்த முறை வாரபோது, என்னையும் பட்டணத்துக்கு அழைச்சிட்டுப் போயி சினிமாவிலே நடிக்கதுக்கு சான்சு வாங்கித்தாறேன்னு கூடச் சொன்னாரு, தெரியுமா!'

ரஞ்சிதம் ஒருத்தியிடம் ரகசியமாகவும் பெருமையாகவும் இதை சொன்னாள். அவள் பொறாமைப்படுவாள் என்று இவள் நினைத்தாள்.

ஆனால் அந்த அவளோ, இவளை ஒரு தினுசாகப் பார்த்தாள். 'இது ஒரு மாதிரிதான் போலிருக்கு. கல்யாணம் ஆகிறதுக்கு முன்னாடியே கண்டபடி அலைஞ்ச கழுதை!' என முடிவுகட்டிப் போட்டாள். 'நம்ம குப்பையா அண்ணனுக்கு போயும் போயும் இப்படி ஒரு சின்னச் சவமா பெண்டாட்டியா வந்து வாய்க்கணும்?' என்று உளம் புழுங்கினாள். ரஞ்சிதம் நடத்தை மோசம் என்று தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் ரகசியமாகச் சொல்லி வைத்தாள்.

எந்த ஊரையும் ஊர்காரர்களையும் ரஞ்சிதம் மட்டமாகக் கருதினாளோ, அவர்கள் அவளை மட்டமாக எடைபோட்டு, முத்திரை குத்தி, உன் பவிஷூ இவ்வளவுதான் என்று ஒதுக்கிவிட்டார்கள். ஆனாலும், அவளைப்பற்றி மனம் போன போக்கில் பேசி மகிழத் தயங்கவில்லை.

அதெல்லாம் ரஞ்சிதத்துக்குத் தெரியாது. இதுவும் ஒரு ஊரா? இங்குள்ள சனங்களும் ஒரு சனமா? தரித்திரங்கள். நாகரிகம் தெரியாத முண்டங்கள் என அவள் கரித்துக் கொண்டிருந்தாள்.