பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊரும் ஒருத்தியும் 57

அவள் இயல்பான சந்தோஷங்களை அனுபவிக்க முடியாமல், கனவு இன்பங்களுக்காக ஏங்கி, நாட்களை ஒட்டலானாள்.

பிறந்த வீட்டில் ஏதோ விசேஷம் என்று அவள் அம்மா வந்து ரஞ்சிதத்தைக் கூட்டிப் போனாள். பின்னர் வருவதாகக் குப்புசாமி சொல்லி அனுப்பினான்.

உழைப்பில் மிகுந்த அக்கறையும் ஈடுபாடும் கொண்டிருந்த அவன் சொன்னபடி போக முடியவில்லை.

அப்புறம் போக வேண்டியது அவசியம் இல்லை என்றாகி விட்டது. -

ரஞ்சிதம் நாகரிக மன்மதன் ஒருவனுடன், அவன் பேச்சையும் சிரிப்பையும் ஆசை வார்த்தைகளையும் நம்பி, வீட்டை விட்டுப் போய்விட்டாள். இந்தச் செய்தி குப்புசாமிக்கும் அவன் ஊருக்கும் தெரிந்தது. பரபரப்பான பேச்சுக்கும் ஏச்சுக்கும் தூண்டுதல் ஆயிற்று, சிறிது காலத்துக்கு.

ரஞ்சிதம் சினிமாவில் சேரத்தான் போயிருப்பாள்; அப்படி ஆசை காட்டித்தான் நாகரிகம் மைனர் அவளை கூட்டிக் கொண்டு போயிருப்பான் என்று குப்புசாமியும், அந்த ஊர்க்காரர்களும் நம்பினார்கள்.

அதுதான் நிஜமும்கூட.

நிஜமான சந்தோஷங்களை அனுபவிக்க மனம் இல்லாத, பகட்டி மினுக்கிய நிழல் இனிமைகளையே நாடி அலைந்த ரஞ்சிதம் என்ன ஆனாள் - அல்லது ஆவாள் - என்று அந்த ஊர் கவலைப்படவில்லை.

தன்னை விரும்பி நேசிக்க மனமில்லாது வெறுத்த அவளை தன்னவளாக அந்த ஊர் ஏற்றுக் கொண்டதில்லைதான்.

(சலங்கை)


புது விழிப்பு

வன் உளம் சோர்ந்து, உணர்ச்சிகள் குன்றி, செய்வதற்கு எதுவுமற்று, செய்யும் வகை என்னவென்று புரியும் சக்தியற்று, எதிலுமே ஆர்வமும் அக்கறையும் இல்லாதவனாய் மாறி இருந்தான்.

அவன் பெயர் - என்னவாக இருந்தால் என்ன! இன்றைய இளம் தலைமுறையை சேர்ந்தவன். எதிர்காலம் என்னுடையது!’ என்று உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும், நம்பிக்கை