பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 வல்லிக்கண்னன் கதைகள்

யோடும் ஒலி எழுப்பும் இதயத்துடன் வாழ்க்கைப்பாதையில் தலைநிமிர்ந்து முன்னேற வேண்டிய இளைஞன். எதிர்வரும் எல்லாவித அனுபவங்களையும் முகமலர்ச்சியோடு ஏறறு அனுபவித்து, அறிவு விசாலம் பெற்று எப்படி எப்படி எல்லாமோ வாழ வேண்டிய வாலிபன்.

ஆனால், இன்று அவன் முன்னே கொக்கி வளைந்து நிற்பது ஒரே பிரச்னை - எப்படி வாழ்வது?

அவன் உள்ளத்தில் சதா ஒலித்துக் கொண்டிருந்த ஒரே கேள்வி - 'என்ன பண்ணுவது?'

அவனுடைய பெற்றோர்கள் நம்பிக்கையோடு அவனை படிக்க வைத்தார்கள். பையன் படித்து, பட்டம் பெற்று, நல்லதொரு உத்தியோகத்தில் அமர்ந்து விடுவான்; கைநிறைய சம்பளம் பெறுவான்; விடிவு காலம் பிறக்கும் அவனுக்கு, நமக்கு, நம் குடும்பம் முழுமைக்குமேதான். இவ்விதம் அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

அவன் தாய் உள்ளுர ஆசைப்பட்டாள்; மகன் பெரிய படிப்பு படித்து, பெரிய வேலைக்குப் போவான். நிறைய ரொக்கமும் பெரும்தொகை மதிப்பு உடைய நகைகளும் கொடுத்து. பெண்ணையும் கொடுத்து மணம் முடித்து வைக்கும் பெரிய இடத்து சம்பந்தம் தானாகவே தேடிவரும்.

அவனுக்கும் ஆசைகளும் கனவுகளும் மிகுதியாக இருந்திருக்கும் தான். பொழுது போகாத நேரங்களிலும், சுகமான சோம்பல் வேளைகளிலும், அவன் கட்டிய எண்ணக் கோட்டைகளுக்கும் பறக்க விட்ட கற்பனைக் காற்றாடிகளுக்கும் ஒரு கணக்கு இருக்க முடியாது தான்.

அவன் படித்து, பாஸ் பண்ணி, பட்டம் பெற்றதில் குறை ஒன்றும் இல்லை. அதன் பிறகு, படித்து முடித்த எல்லா வாலிபர்களும் செய்கிற - செய்யக் கூடிய காரியங்களை செய்வதில் மும்முரமாக முனைந்தான். வேலை வேட்டைக்கு உரிய முயற்சிகளில் தான்.

'எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்'சில் பெயரை பதிவுசெய்வது முதல், தினசரிப் பத்திரிகையில் 'வேலை காலி’ப் பகுதியில் உள்ள வரி விளம்பரங்களை படித்து, தகுதியானது எனத் தோன்றியனவற்றுக்கு மனுக்கள் எழுதி அனுப்புவது, எவர் எவரையோ போய் பார்த்து அங்கும் இங்கும் சிபாரிசு செய்யச் சொல்லி அலைவது ஈறாக, சகல முயற்சிகளையும் மேற் கொண்டான். உத்தியோகத்துக்கான பற்பல பரீட்சைகளையும்