பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 வல்லிக்கண்ணன் கதைகள்

'இன்னும் மேல்படிப்பு வேறே வாழுதாக்கும்! படிச்ச படிப்புக்கு சம்பாத்தியம் பண்ணிச் சாப்பிடத் துபபு @మGఖ. இன்னும் படிக்கனுமாமில்லே! என்று தந்தை எக்காளமாகவும் எரிச்சலோடும் சொல் வீசினார்.

அவன் மனம் மேலும் ஒடிந்தது. உளைச்சல் மிகுந்து பலவீனமாகி விட்ட ஒரு நேரத்தில் அவன் அந்த முடிவுக்கு வந்தான். சாக வேண்டியது தான்.

இப்படி உயிர் வைத்துக் கொண்டு, இடிபட்டு, விமோசனத்துக்கு வகை தெரியாமல் திரிவதைவிட, செத்து ஒழிவதே மேல். எனது பிரச்னைகளுக்கும், மற்றவர்கள் சிரமங்கள் இழப்புகளுக்கும் அது சுலபமாக முடிவுகட்டி விடும்.

இந்த எண்ணத்தை வைத்து 'தாயம் ஆடியது' மனம். அதுவே நல்லது என்று சித்திரித்துக் காட்டியது. அந்நினைப்பே பூதவடி வெடுத்து அவன் உள்ளத்தில் நிறைந்து நின்று அவனை ஆட்டிப் படைத்தது.

இருந்தாலும், எந்த விதத்தில் உயிரைப் போக்கடித்துக் கொள்வது என்று தீர்மானிக்க இயலாதவனாய் அவன் தத்தளித்தான். நாளிதழ்களில் தவறாது வந்து கொண்டிருந்த தற்கொலைச் செய்திகளை ஊன்றிப் படித்தான். ஊர்தோறும் தற்கொலைச் சாவுகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. ஏதேதோ காரணங்களுக்காக யார்யாரோ, எப்படி எப்படியோ தங்களைத் தாங்களே சாகடிப்பது, வாழ முடியாதவர்கள் தங்கள் பிரச்னையை வேறு வழிகளில் தீர்த்துக் கொள்ள வகையற்று, இறுதியான ஒரே முடிவை கையாளத் துணிகிறார்கள் என்பதை உணர்த்தியது.

அவன் அதையே எண்ணியவனாய் நெடுக அலைந்தான். பிரமை பிடித்தவன் மாதிரி அங்கங்கே நின்றான். அப்போதெல்லாம் வீதிகளில் போகிற வருகிற பலதரப்பட்டவர்களையும் பார்த்து, இவர்கள் எல்லாம் எங்கே என்ன வேலை பார்க்கிறார்களோ? எவ்வளவு சம்பளம் பெறுவார்களோ? எப்படி வாழ்க்கை நடத்துகிறார்களோ என்ற ரீதியில் அவன் மனம் கேள்விகளை அடுக்கும். வாழ்க்கையை, அதன் விரிந்து பரந்த பல்வேறு சிக்கல்களை, புரிந்து கொள்ளும் சக்தி இல்லாதவனாய் அவன் குழம்புவான்.

அவ்வாறு ஒரு முச்சந்தியின் நடைபாதை ஒரத்தில் அவன் நின்று கொண்டிருந்த போது தான், ‘என்னடே இங்கே நிற்கிறே?' என்று உரிமையோடு அழைக்கும் குரலும், அன்போடு முதுகில் தட்டிய கையும் அவனை திடுக்கிட்டு திரும்பச் செய்தன. -