பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புது விழிப்பு 61

விநாயகம்பிள்ளை அண்ணாச்சியின் சிரித்த முகம் அவனை விசாரித்தது: 'இப்ப என்னடே செய்றே? படிப்பு முடிஞ்சிட்டுதுன்னு கேள்விப்பட்டேன். என்ன வேலை பார்க்கிறே?'

'வேலை தேடும் வேலை தான். வேறே என்னத்தைப் பார்க்கிறது! வேலை என்ன சுலபமாக் கிடைச்சிருதா?' உள்ளத்தின் கசப்பு அவன் குரலில் கசிந்தது.

'அது எப்படிடேய் கிடைக்கும்?' என்றார் வி.பி. அண்ணாச்சி. 'ஒவ்வொரு வருடமும் பல லட்சம் பேரு எஸ்.எஸ். எல்.சி. ப்ளஸ்டுன்னு பரீட்சை எழுதிபாஸ் பண்ணுறாங்க காலேஜ் படிப்பு, உத்தியோகப் படிப்புன்னு படிச்சு பாஸ் பண்றவங்க வேறே. இவங்க எலாருமே கிளார்க்குளாகவும் ஆபீசர்களாகவும் டாக்டர்களாகவும் என்ஜீனியர்களாகவும் வந்து நல்லா சம்பாதிக்கணுமின்னு தான் ஆசைப்படுறாங்க. நல்ல ஆசை தான். ஆனால் ஒவ்வொரு வருடமும் லட்சம் லட்சமாகத் தயாராகி வருகிற மொத்தப் பேருக்கும் நாட்டிலே வேலை எப்படி கிடைக்கும்? வேலை வாய்ப்புகள் எங்கே இருக்குதாம்? அதையும் யோசிக்கணுமில்லே?’ என்று சொல்லி, சிரிப்பு என்று பெரும் கனைப்பு கனைத்தார்.

அவனுக்கு எரிச்சல் வந்தது. 'அதுக்காக படிக்கவே படாதுங்கிறீங்களா?' என்று கேட்டான்.

‘அப்படி யார் தான் சொல்லுவா? படிக்கட்டும், நல்லா படிக்கட்டும். எல்லாரும் படிக்கட்டும். ஆனா தம்பியாபிள்ளே, அறிவு விசாலம் ஆகணும், ஞானம் பெருகணுமின்னு சொல்லியா படிக்கிறாங்க? இந்தக் காலத்திலேயும் அந்த எண்ணத்தோடு படிக்கப் போறவங்க கொஞ்சம் பேரு இருக்கத்தான் செய்வாங்க. ஆனால் ரொம்பக் கொஞ்சம் தான். படிச்சா வேலை கிடைக்கும். மேல் படிப்பு படிக்கப் படிக்க உயர்ந்த உத்தியோகம், கை நிறையச் சம்பளம், வசதியான வாழ்க்கை எல்லாம் கிடைக்கும்கிற ஆசையிலேதான் ரொம்ப்ப் பேரு படிக்கிறாங்க. படிச்சு முடிச்சா, வேலை கிடைக்காத திண்டாட்டம். வேலை கிடைச்சாலும், சம்பளம் பத்தலியேங்கிற குறை. எவ்வளவு பணம் கிடைச்சாலும், பற்றாக்குறைதான். எப்பவும் திண்டாட்டம் தான். நம்ம படிப்பு வாழ்றதுக்கு கற்றுக்கொடுக்கவும் இல்லே: நல் வாழ்வுக்கு வகை செய்வதாயுமில்லே. நம்ம வாழ்க்கை முறை, படிப்பு நிலை, பொருளாதார நிலைமை எல்லாம். ஏதோ ஒரு போலியான வட்டத்திலேயே சுழல்கின்றன...'

'லெக்சரடிப்பது' அவர் சுபாவம். அதனால் அவன் பதில் எதுவும் சொல்லாது நின்றான். - -