பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 வல்லிக்கண்ணன் கதைகள்

'இப்படி ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நாட்கூலியாக மிகக் குறைந்த சம்பளம் பெறுகிற உழைப்பாளிக, மற்றும் மாதச் சம்பளம் என்று ஒருசில நூறுகளே பெற்றுக் கொண்டு வேலை பார்க்கிறவங்க. இவங்க எண்ணிக்கையும் நிறைய இருக்கு. அதை வைத்துக் கொண்டு சாப்பாட்டுக்கும் பத்தாம, டிரஸ் வீட்டு வாடகை மருந்துச் செலவு என்று எதுக்கும் பணம் போதாமல் திண்டாடுற குடும்பங்களும் நிறையத்தான் இருக்கு. இந்த பயங்கர வறுமை நிலை ஒரு பக்கம்... எதைப் பற்றியும் கவலைப் படாமல் நோட்டு நோட்டாக எடுத்து, அலட்சியமாகச் செலவு பண்றவங்களும் இருக்கத்தான் செய்கிறாங்க, இந்த வாழ்க்கை முறையும், சமூக அமைப்பும் எதுவுமே சரியாக இல்லைடே... எல்லாம் மாறியாகணும். அடியோடு மாற்றப்படனும்...'

பொரிந்து தள்ளிவிட்டுத் தன் வழியே போனார் வி.பி. அண்ணாச்சி.

‘இவர் ஒரு ரசமான பேர்வழி தான்!' என்று அவன் எண்ணினான் முதலில். பிறகு, அவர் பேச்சில் இருந்த உண்மைகள் அவன் உள்ளத்தில் சலனங்கள் எழுப்பலாயின.

வேலை இல்லாது கஷ்டப்படுகிறவர்கள் வேலை என்று ஏதேதோ செய்து சம்பளம் என்று ஒரு சிறு தொகை பெற்றும் சரியாக வாழ முடியாமல் அவதிப்படுகிறார்கள்: கடுமையாக நாள் முழுவதும் உழைத்தாலும் முழு வயிற்றுச் சாப்பாட்டுக்கு வகை செய்ய முடியாமல் அரைப் பட்டினி நிலையில் நாளோட்டுகிறவர்கள் போன்றோரைப் பற்றி அவன் எண்ணத் தொடங்கினான். வாழ முயல்கிறவர்களையும், வாழ முடியாதவர் களையும் புதிய நோக்குடன் கவனிக்கலானான்.

இப்படி, பெரும்பாலோருக்கு வாழ்க்கையே பெரும் போராட்டமாகவும், அவர்களது விருப்பத்துக்கு விரோதமாக அவர்களது மீது சுமத்தப்பட்ட கனத்த சிலுவையாகவும் இருக்கிற போது, தான் எதிர்த்து நின்று போராடிச் சமாளிக்க அஞ்சியும், சுமந்தாக வேண்டிய கட்டாயப் பளுவை சுமக்கத் தெம்பு இல்லாமலும், தோல்வியுற்றுத் தளர்ந்து தன்னையே அழித்துக் கொள்ள எண்ணுவது நியாயம் அல்ல என்று அவனது சிந்தனை அறிவுறுத்தியது. ;

அவன் தன் பாதையில் எதிர்ப்படுகிற தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பிறரையும் அவரவர் வாழ்க்கை பற்றியும் பிரச்னைகள் குறித்தும் அனுதாபத்தோடு விசாரித்தான். அவர்கள். சிறிதளவு விரக்தியோடு அலுப்புடனும் பேசிய போதிலும் வாழ்க்கையில் பற்றுதலும் வருங்காலத்தில் நம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பதை அவன் உணர முடிந்தது.