பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு முகம் 67

மறந்து போயிருந்தது. இப்போது சமாளித்துக் கொண்டு ஏதோ ஞஞ்ளுமிஞ்ஞ வார்த்தைகளைக் கொட்டி ஒப்பேற்றி நண்பனோடு நடந்தான்.

இப்படி எத்தனையோ ஏமாற்றங்கள். எனினும் அவன் அந்த முகத்தைப் பிடிக்க பார்வைத் தூண்டிலை கண்ட இடமெல்லாம் வீசி எறிவதை நிறுத்தவில்லை.

எதிர்பாராத ஒரு நேரத்தில், எதிர்பார்க்க முடியாத ஒர் இடத்தில், அந்தமுகம் சந்திரனுக்கு நிஜவடிவமாய் காட்சியாயிற்று. -

கவியரங்கம் ஒன்றில் பங்கு பெறப் போயிருந்த இடத்தில் சந்திரன் அந்த முகத்தையும் அதன் சொந்தக்காரியையும் காணநேரிட்டது. அந்த முகத்தை, அந்த சுந்தரியை, வியப்புடன் பார்த்துப் பார்த்து மகிழ்ந்த உணர்ச்சிப் பெருக்கில் அவன் கவியரங்கத்தில் நன்கு சோபிக்காமலே போனான். இவள் யார்; இவளும் கவிபாட வந்தவளோ என்ற கவலையே அவன் மனசில் தறியடித்துக்கொண்டிருந்தது. வேறொரு கவிஞனோடு அவள் இழைந்து குழைந்ததையும், சிரித்துக் களித்ததையும் காணக்கான சந்திரனுக்கு வேறு வகை ஏமாற்றமும் எரிச்சலும் உண்டாயின.

அந்த ஜோடி சீக்கிரமே வெளியே போய் விட்டது. அவனால் அவர்களை பின்தொடர இயலவில்லை. இதுவும் அவனுக்கு வருத்தம் அளித்தது.

அதன் பிறகு சந்திரன் உள்ளம் வேறுவிதப் பிரச்னைகளைப் பின்னிக்கொண்டு அவற்றிலேயே சிக்கி அவதிப்பட்டது: அவள் யார்? எங்கே இருக்கிறாள்? அந்தக் கவிக்கும் அவளுக்கும் என்ன உறவு? கல்யாணம் செய்து கொண்டார்களா? காதலர்களா? அவர்கள் எங்கு வசிக்கிறார்கள்?

விதி, அல்லது காலம், அல்லது வாழ்க்கையின் விசித்திர சக்தி, - அல்லது என்ன இழவோ ஒன்று - தன்னோடு விளையாடுவதாக சந்திரன் மனம் குமையலானான் இப்போது.

முன்பு அந்த முகத்தை அவன் தேடித்திரிந்த போதெல்லாம் அது தென்படவேயில்லை. தற்செயலாக அந்த சுந்தர முகத்துக்காரி அவன் பார்வையில் நன்றாகவே பட்டு அவனது வயிற்றெரிச்சலைக் கிளறி விட்டதற்குப் பிறகு அடிக்கடி அவள் தரிசனம் கிடைத்துக்கொண்டேயிருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவனது உள்ளத்தின் எரிச்சலும் கோபமும் அதிகரிக்கும் படியாகவே அமைந்தன அவன் பார்வையில் பட்ட தோற்றங்கள்...