பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 வல்லிக்கண்ணன் கதைகள்

சந்திரன் பதில் எழுதினான். அவள் தனது பண்பின்படி கேலி செய்தும் சுவையான விஷயங்கள் சேர்த்தும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தாள். சுவாரஸ்யமில்லாமல் பதில் எழுதி வந்த தங்கம் நாளடைவில் கடிதம் எழுதுவதையே விட்டு விட்டாள். அவளைப் பற்றிக் குறைகூறியும் மனம் கசந்தும் எழுதி வந்த சந்திரன், ராஜம்மாளைத் துதி பாடத் தொடங்கியிருந்தான். அடிக்கடி அவளுக்குக் கடிதம் எழுதுவதில் ஆர்வம் காட்டினான் அவன்.

ரசமான பொழுதுபோக்கு என்று மகிழ்ச்சியோடு இவ் விவகாரத்தில் ஈடுபட்ட ராஜம்மா உண்மையை உணர்ந்து கொண்டாள். சந்திரன்தங்கத்தின் மீது கொண்டிருந்த காதல் கருகி விட்டது; காதல் பயிரை அவள் சரியாக வளர்க்கத் தவறி விட்டாள் என்பது புரிந்தது.

இனி என்ன செய்யலாம் என்ற யோசனை ராஜத்தை அலைக்களித்தது. அவள் சந்திரனின் கடிதங்களுக்குப் பதில் எழுதாமலே இருந்து விட்டாள். அவள் எதிர்பார்க்கவில்லை சந்திரன் அவளைத் தேடி அவள் இருக்குமிடத்திற்கே வந்து விடுவான் என்று. -

அவன் அவ்விதம் வந்தது ராஜத்துக்கு மகிழ்ச்சி தான் அளித்தது. எனினும் தன் சிநேகிதிக்காக அவள் பரிந்து பேசினாள். பலன் தான் கிட்டவில்லை.

ராஜம்மாளுக்குச் சந்திரனைப் பிடிக்காமல் இல்லை. அவன் தோற்றமும் குணங்களும் பேச்சும் அவளுக்குத் திருப்தியே தந்தன. 'தங்கம் காதலில் வெற்றி பெறவில்லை என்றால், அது தங்கத்தின் தவறு தான். சந்திரன் என்மீது அளவிலாக் காதல் கொண்டு விட்டதற்கு நானா பழி?' என்று அவள் தன் நெஞ்சோடு கூறிக்கொண்டாள். -

சந்திரன் ராஜம்மாளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான் என்ற செய்தி அறிந்ததும் தங்கம் பெருமூச்செறிந்தாள். அவள் உள்ளத்தில் பொறாமையும் ஆத்திரமும் 'திகு திகு' வென்று எரிந்தது.

'இந்த நோக்கத்தோடு தான் அவள் சிரித்துக் குலுக்கி அவன் கூட வலிய வலியப் பேசினாள் போலிருக்கிறது!’ என்றுதான் அவளால் எண்ண முடிந்தது.

'தங்கம், நீ என்மீது வருத்தம் கொண்டிருக்கலாம். கோபப்படலாம். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? தலைவி சிறந்தவள் என்று நம்ப வேண்டிய காதல் தலைவன் தோழி தான் நல்லவள் என்று நினைக்க நேர்ந்து விட்டால், அது யார் பிசகு?