பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்! 75

தலைவன் மீது தவறா? தலைவி பேரில் தான் தவறா? இதற்கு விடையை நீயே தான் கண்டு கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் நான் ஒன்று கூற விரும்புகிறேன். உனக்காக நான் எவ்வளவோ வாதாடினேன். கடைசி வரையில், தோழி நல்ல தோழியாக விளங்கவே பாடுபட்டாள். அவ்வளவு தான்' என்று ராஜம்மா எழுதினாள்.

அந்தக் கடிதத்தை ஆத்திரத்தோடு கிழித்தெறிந்தாள் தங்கம்.

சந்திரன் என்ன நினைத்தான் என்றும் தெரிந்து கொள்ள வேண்டியதுதானே? 'அவள் தங்கமாக இருக்கலாம். ஆனால், தங்கத்தின் தோழி வெள்ளியாக இருக்க வில்லையே! இணையில்லாத மாமணியாக அல்லவா வாய்த்து விட்டாள். அதனால் தான், தங்கத்தின் தோழியை நான் என்னுடைய தோழியாய் - துணையாய் - வாழ்வின் ஒளியாய் ஏற்றுக் கொண்டேன்’ என்று அவன் எண்ணினான்.

தான் செய்த முடிவுக்காகச் சந்திரன் வருத்தம் கொள்ள நேர்ந்ததே இல்லை.

('மாத மலர், 1968)


சொல்ல முடியாத அனுபவம்


சுயம்புலிங்கத்துக்கு தீராத மனக்குறை. யார் யாருக்கோ என்னென்ன அனுபவங்கள் எல்லாமோ எதிர்ப்படுகின்றன; தனக்கு ரசமான, ஜோரான, சுகமான அனுபவம் ஒன்று கூடக் கிட்டமாட்டேன் என்கிறதே என்றுதான்.

நினைக்க நினைக்கக் கிளுகிளுப்பூட்டும் இனிய நிகழ்ச்சிகள். சொல்லச் சொல்ல வாயூறும் - கேட்பவர்கள் காதுகளில் தேன் பாய்ச்சும் - மற்றவர்கள் நெஞ்சில் ஆசைக் கள்ளைச் சுரக்க வைக்கும் - ஒரு சிலரது உள்ளத்திலாவது பொறாமைக் கனலை விசிறிவிடும் அற்புதமான அனுபவங்கள்.

ஐயோ, பேசிப் பேசிப் பூரித்துப் போகிறார்களே பல பேர்! இரண்டு பேர் சந்தித்தாலே, 'கேட்டிரா சங்கதியை! நேற்று...' என்று ஆரம்பித்து சுவாரஸ்யமாக வர்ணிக்கிறார் ஒருவர். 'போன மாசம் அப்படித்தான், பாருங்க...' என்று தொடங்கி அளக்கிறார் மற்றவர்.

திண்ணைகளிலும், விசேஷ வீடுகளில் கூடுகிறபோதும், சும்மா நாலைந்து பேர் கூடிப் பேசிப் பொழுது பேர்க்குகிற