பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொல்ல முடியாத அனுபவம் 77

சிலர் பேய்களுடன் நேரிட்ட பேட்டி; பாம்பு அல்லது துஷ்ட மிருகத்தை எதிர்த்துக் கொன்றது; அபூர்வமாகக் கிடைத்த வாட்ச் அல்லது நகை அல்லது பர்ஸ் - இப்படி சந்தர்ப்பச் சூழ்நிலை களோடு விவரித்தார்கள். அதிர்ஷ்டசாலிகள்!

- நம்ம வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? பிஞ்சு போன முறத்தாலே அதை வெளும்பச் சாத்த! அறுந்த பழைய செருப்பாலே அதன் மூஞ்சியிலே போட! இப்படி எல்லாம் எடுத்துச் சொல்வதுக்கு ஒரு அனுபவத்துக்குக் கூட வழி செய்யலியே அது!

சுயம்புவின் உள்ளம் காளவாயாய்க் கொதிக்கும். புழுங்கும். புகையும்.

ஒரு அனுபவம் நேரக்கூடாது? ஒரே ஒரு அனுபவம்! புதுமையானதாய்! சகஜமாக எதிர்ப்பட முடியாததாய்! நிகழ்ந்தால் என்ன?

இதுவே அவனது நித்திய, நிரந்தர ஏக்கமாக அமைந்து அவனை அலைக்கழித்தது.

சுயம்புலிங்கத்துக்கு உதவி புரிய காலம் மனம் கொண்டது போலும்!

அவனது ஊரிலிருந்து ஆறு மைல்களுக்கு அப்பால் உள்ள 'ரெண்டுங் கெட்டான்' ஊருக்கு சுயம்பு போக வேண்டியதாயிற்று. அங்கே வசித்த உறவினர் அவனை வந்து போகும்படி அழைத்திருந்தார்.

அவன் போனபோது அவர் வீட்டில் இல்லை. எப்போது வருவார் என்று தெரியவுமில்லை.

அவன் சென்றது பிற்பகல் மூன்று மணிக்கு. சரி, ஐந்து மணி சுமாருக்கு வந்து பார்க்கலாமே என்று எண்ணி அவன் தெருக்களில் நடந்தான். ஒட்டலுக்குப் போனான். பிறகு ரயில்வே ஸ்டேஷனில் போய் உட்கார்ந்திருக்கலாம்; வசதிப் பட்டால் படுத்தும் கிடக்கலாம் என்று நினைத்தான். போனான்.

சுமாரான ஸ்டேஷன். அந்நேரத்துக்கு வண்டி எதுவுமில்லை. பெஞ்சுகள் காலியாகக் கிடந்தன. ஒரு சுவர் ஒரத்தில், கல்தரை மீது நீட்டி நிமிர்ந்து சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தான் ஒருவன். அருமையான காற்று. அமைதியான சூழ்நிலை.

சுயம்பு சுற்றிலும் நடந்து பார்த்தான். ஸ்டேஷன் அலுவல் அறை பூட்டிக் கிடந்தது. தொழிலாளிகளும் இல்லை. வண்டி வருவதற்கு அதிக நேரம் இருக்கும் எனத் தோன்றியது.