பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 வல்லிக்கண்ணன் கதைகள்

சுயம்பு ஒரு பெஞ்சில் அமர்ந்தான். கருங்கல் தளத்தை, செம்மண் தரையை, நீல வானை, வேப்ப மரங்களின் பசுமையை, சுவர்களின் வெண்மையை - இவ்விதமான வர்ண விஸ்தாரங்களை ரசித்தபடி இருந்தான்.

அவன் கண்களுக்கு விருந்தாக வேறு விதக் கலர் வந்து சேர்ந்தது.

பளிர் வர்ண மில் ஸாரி கட்டிய ஒரு பெண். வயது என்ன இருக்கும்? முப்பதும் இருக்கலாம், நாற்பதும் இருக்கலாம்; இதற்கு இடைப்பட்ட எதுவாகவும் இருக்கலாம். இவ்வாறு கணக்கிட்டது அவன் மனம்.

அவளைப் பார்ப்பதும் பார்க்காதது போல் நடிப்பதுமாக இருந்த அவனை நைஸாக எடை போட்டபடி நடந்து வந்து அவள் எதிர் வரிசை பெஞ்சு ஒன்றில் உட்கார்ந்தாள். அங்குமிங்கும் பார்த்தாள்.

'என்னங்க, வண்டி வர நேரமாயிடுச்சா?” என்று கேட்டாள்.

அங்கே வேறு எவரும் இல்லையாயினும், அவள் தன்னைப் பார்த்துத்தான் கேள்வியை விட்டெறிந்தாள் என்று புரிந்து கொள்ள அவனுக்கு நேரமாயிற்று.

அதற்குள் அவளே, 'ஐயா, தெற்கே போற வண்டி எப்ப வரும்? நேரம் ஆயிடுச்சா?’ என்று விசாரித்தாள்.

சுயம்பு அவளை நேரடியாகப் பார்த்தான். "எனக்குத் தெரியாதே. ரயில் எப்ப வரும்னும் தெரியாது” என்றான்.

அவள் சிரித்ததுபோல் பட்டது அவனுக்கு. தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான்.

அவள் அவனை ஒரு தினுசாக நோக்கினாள். சிறிது நேரம் அங்கேயே இருந்தான். பின், எழுந்து ஸ்டேஷன் உள்ளே போனாள்.

சுயம்பு அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை சுற்றி நகர்ந்து, அவள் காலி செய்து போன இடத்தில் படிந்தது. வியப்புற்றது.

அந்த பெஞ்சில் ஒரு பை - சின்ன பிளாஸ்டிக் பை; நீல நிறத்தில் - கிடந்தது.

அவள் வருவாள், எடுத்துக் கொள்வாள் என்று பேசியது மனம்.

நேரம் மிக மெதுவாக ஊர்வது போல் தோன்றியது. அவன் பொறுமையைச் சோதிப்பதாகவும் இருந்தது அது.