பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொல்ல முடியாத அனுபவம் 79

கணிசமான நேரம் காத்திருந்து விட்டதாகப் பட்டதும் அவன் எழுந்தான். ஸ்டேஷன் உள்பக்கம் பார்த்தான். அவளைக் காணவில்லை. எங்கோ போய்விட்டாள். அவள் ரயிலுக்காக வந்தவளில்லை என்றே மனம் கூறியது. அந்த பெஞ்சு அருகே போய் அந்தப் பையை எடுத்தான்.

மீண்டும் அங்குமிங்கும் பார்த்தான். திறந்தான்.

பைக்குள் சில வெற்றிலைகளும் பாக்கும்தான் இருந்தன. ஒரு சிறு பொட்டணம். எடுத்து நோக்கினான் புகையிலை.

இவ்வளவுதானா என்றது மனம்.

ஏமாற்றத்துடன் அதைக் கீழே போட்டான். அதற்காகவே பதுங்கி நின்றவள் போல் வேகமாக முன் வந்தாள் அவள். 'என் பையை ஏன் எடுத்தே?’ என்று கேட்டபடி பாய்ந்தாள்."

குனிந்து பையை எடுத்தாள். உள்ளே பார்த்தபடி, "ஏ, இதிலே இருந்த நோட்டு எங்கே? அம்பது ரூபா நோட்டு. நைசா அமுக்கிக்கிட்டியா?" என்றாள்.

சுயம்பு பதறிப்போனான். எதிர்பாராத அதிர்ச்சி. "அதிலே ரூபா நோட்டு எதுவும் இல்லே... வெத்திலை பாக்குதானே இருந்தது?" என்று சொன்னான்.

"களவாணி ராஸ்கல்! மரியாதையா ரூபாயைக் கொடுத்திரு. இல்லையோ, கூச்சல் போட்டு கும்பல் கூட்டுவேன்" என்று அவள் மிரட்டினாள்.

"அதிலே ரூபாயே கிடையாது. நான் அதிலிருந்து எதையும் எடுக்கவுமில்லை" என்றான். அவன். அவன் உள்ளத்தில் ஒரு பீதி கவிந்தது. என்ன அநியாயமாக இருக்கிறதே என்று ஒரு நினைப்பு.

"ஏ! மரியாதையா ரூபாயைக் கொடு. இல்லே. நீ சீரழிஞ்சு போவே" என எச்சரித்தான் அவள்.

"நான் எடுத்திருந்தால்தானே தர முடியும்?"

“இங்கே என்ன தகரால்?" கரகரத்த குரலில் கேள்வி எழுப்பியபடி ஒரு காக்கிச் சட்டைக்காரன் அங்கே வந்தான். அங்கே கூலி வேலை செய்கிறவனாக இருக்கும்.

"இந்த ஆளை சரியா விசாரி. பகலு வேளையிலேயே ஐயாவுக்கு என்னமோ மாதிரி இருக்கும்தாம். என் கையைப் புடிக்கிறாரு” என்றாள் அவள்.