பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொல்ல முடியாத அனுபவம் 81

'அனுபவம் புதுமை!’ என்ற நினைப்பு வெடித்தது அவனுள். 'எதிர்பாராதது! இதுவரை நடக்காதது!”

- கேவலம், கேவலம்! வாயைத் திறந்து இதை யாரிடம் சொல்ல முடியும்? பெருமையாகப் பேசப்படுவதற்கு உரிய அனுபவமா இது. -

சுயம்புலிங்கம் பெருமூச்செறிந்தான்.

'கையில் காசில்லை. நடந்து நடந்தே ஊர் போய்ச் சேர வேண்டியதுதான். ரெண்டரை அல்லது மூணு மணி நேரம் ஆகும்' என்றது அறிவு.

('குங்குமம், 1982)


நண்பர்கள்


தெற்கு வடக்காக அகன்று நீண்டு கிடந்த மேலத்தெருவின் கிளைபோல் கிழக்கு நோக்கி ஒடுங்கலாகப் பிரிந்து சென்ற நடுத்தெருவில் திரும்பி அடியெடுத்து வைத்த ஆண்டியா பிள்ளையின் நடையில் தனியொரு வேகம் சேர்ந்தது. கைலாசம் பிள்ளையை சந்திக்கப் போகிறோம் என்ற துடிப்பு, அவர் கால் செருப்பின் 'டப் - டிப்' ஒசையிலேயே உயிரொலி கொடுப்பது போல் தோன்றியது.

'அண்ணாச்சியை பார்த்து ஒருவருசத்துக்கு மேலே ஆகுதே. இவ்வளவு நீண்டநாள் நான் இந்தப்பக்கம் வராம இருந்ததே இல்லை. ரெண்டு மாசத்துக்கு ஒருக்க, மூணு மாசத்துக்கு ஒருதடவை நான் இந்த ஊருக்கு வந்துக்கிட்டுத்தானே இருந்தேன்? அந்த ஜவுளிக்கடை வேலையை விட்டுப்போட்டு இன்னொரு கடையிலே சேர்ந்த பிறகு எங்கேயும் போக முடியாமலே ஆயிட்டுது.'

ஆண்டியாபிள்ளைக்கு பெருமூச்சு எழுந்தது. வேகம் வேகமாக நடப்பதனால் மட்டுமே வாங்கிய மேல்மூச்சு அல்ல அது...

மேலத்தெருவில் நடந்தபோதே, அதுக்கும் முந்தி பஸ்ஸில் வந்து கொண்டிருந்தபோதே, அவர் நினைப்பெல்லாம் கைலாசம் பிள்ளையைத்தான் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இரண்டு பேருக்கும் நீண்டகாலப் பழக்கம். சுற்றி வளைத்து ஏதோ ஒருவகையில் சொந்தம் கொண்டாடுகிற உறவு என்றாலும்,