பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 வல்லிக்கண்ணன் கதைகள்

அதைவிட அழுத்தமான நட்பு உணர்வு இரண்டு பேருக்கிடையிலும் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆண்டியாபிள்ளை அந்த ஊருக்கு வரும்போதெல்லாம், 'அண்ணாச்சி யோவ்!’ என்று கூவிக்கொண்டு கைலாசம்பிள்ளை வீட்டை எட்டிப் பார்க்காமல் போவதில்லை. அண்ணாச்சியும் அவரைக் கண்டதும் அகமும் முகமும் மலர 'வாரும் வேய்!' என அன்புடன் அழைத்து, ‘என்ன சவுக்கியம் எல்லாம் எப்படி?' என்று விசாரிக்கத் தவறியதுமில்லை.

அதிலிருந்து பேச்சு கிளைவிட்டு, கொடிகள் பரப்பி, எப்படி எப்படியோ தழைத்து, எது எதையோ தொட்டு, சகல விஷயங்களையும் பற்றிப் படரும். உள்ளுர் சமாச்சாரங்களை அண்ணாச்சி சொல்ல; அயலூர் அக்கப்போர், தெரிந்தவர்கள் பற்றிய வம்புகள், ரசமான கிசுகிசுப்புகள், மற்றும் பத்திரிகைச் செய்திகள் என்று ஆண்டியாபிள்ளை கூற, பேச்சு மணிக் கணக்கில் வளரும்.

இரண்டு பேரும் சுவாரஸ்யமாகப் பேசி மகிழ்வார்கள். காப்பி போட்டுக் கொண்டு வரும்படி அண்ணாச்சி உத்தரவிடுவார்.

காப்பி வரும். எந்த நேரமானாலும் 'கடுங்காப்பி'தான் - பால் சேர்க்கப்படாத கறுப்புக் காப்பி. அது ஒரு தனிச்சுவை கொண்டிருக்கும். மதினி கருப்பட்டியை தூக்கலாகவே போட்டிருப்பாள். ரொம்ப இனிச்சிருக்கும் பானகம் அது என்றாலும் ஆண்டியா பிள்ளை ருசித்துப் பருகுவார். சுவை பெரிதல்ல. அதில் அருவமாகக் கலந்திருக்கிற அன்புதான் முக்கியம். இது தம்பியா பிள்ளைக்குத் தெரியும்.

'தரித்திரம் புடிச்ச இந்த ஊரிலே பால் கிடைக்கிறதே இல்லை. தயிரு, மோரு எதுவுமே கிடைப்பதில்லை. அதனாலேதான் கடுங்காப்பி' என்று அண்ணாச்சி சொல்லுவார் - ஒவ்வொரு தடவையும் சொல்லுவார்.

'அதனாலென்ன, கடுங்காப்பிதான் டேஸ்ட்... நல்லதும் கூட!' என்று ஆண்டியாபிள்ளை கூறுவார்.

கிராமத்தில் உள்ள கறவை மாடுகளின் பால் எல்லாம் பண்ணையில் கறக்கப்பட்டு பக்கத்து டவுண்களுக்குப் போய்விடுவதால், ஊரிலே பாலுக்குத் தட்டுப்பாடு என்கிற உண்மையும் ஒவ்வொரு முறையும் அவர்களது பேச்சில் அடிபடும்.

இருந்தாலும், ஊரில் பால் தாராளமாகவே கிடைக்கிற நிலை இருந்தால்கூட, அண்ணாச்சியின் நிரந்தரமான பற்றாக்குறை