பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நண்பர்கள் 85


"ஆங்... என்னது?”

'அண்ணாச்சி இறந்து எட்டு மாதங்கள் ஆச்சு...”

ஆண்டியாபிள்ளை திகைப்புடன், "என்ன செய்தது...?" என்றார்.

"ஆஸ்துமாதான். ரொம்பவும் கஷ்டப்படுத்தி விட்டது...”

"சே, எனக்குத் தெரியாதே!" என்று முணுமுணுத்தார் பிள்ளை. "அவாளை பார்க்க வராமலே போயிட்டேனே!”

குறுகுறு என்று உட்கார்ந்திருந்தார். வேறு எதுவும் சொல்லாமலே தரைமீது படுத்தார். கண்களை மூடிக் கொண்டார்.

சோமு அவரையே கவனித்தபடி இருந்தான். அவர் முகம் ஏதோ வேதனையைக் காட்டுவதாக அவனுக்குத் தோன்றியது. இந்தச் செய்தி அவருக்கு அதிர்ச்சி தந்து விட்டது என்று எண்ணினான்.

நேரம் ஊர்ந்து கொண்டிருந்தது. அவரை குரல் கொடுத்து உலுக்கலாமா என்று அவன் தயங்கினான்.

சட்டென்று அவரே நிமிர்ந்து உட்கார்ந்தார். "எனக்கு என்னமோ ஒரு மாதிரி வருது..." என்று மென் குரலில் சொன்னார். "நீத்தண்ணி இருக்குமா? ஒரு டம்ளர் கொடேன்" என்றார்.

சோமு வீட்டினுள் போய், பழஞ் சோற்றுப்பானையில் உள்ள தண்ணிரை ஒரு சிறுசெம்பில் எடுத்து வந்து அவரிடம் தந்தான். உப்பு சேர்க்கப்பட்டிருந்த அந்த 'நீராகார'த்தை அவர் குடித்தார். செம்பை கீழே வைத்துவிட்டு, மவுனமாக அமர்ந்திருந்தார்.

பிறகு எழுந்து, துண்டை உதறித் தோள்மீது போட்டுக் கொண்டு, "வாறேன்” என்று முனகியபடி நடந்தார். வந்தபோது இருந்த மிடுக்கு இப்போது இல்லை அவர் நடையில், நடப்பதே சிரமமான வேலையாக அமைந்து விட்டதுபோல் தோன்றியது.

சோமு அவருக்காக அனுதாபப்பட்டான். 'பாவம்!' என்று கூறிக் கொண்டான்.

அன்று பிற்பகலில் 'ஆண்டியா பிள்ளை செத்துப்போனார்' என்ற செய்தி அவனுக்கு அதிர்ச்சியூட்டும் தகவலாகத்தான் இருந்தது. -

('சிறுகதை களஞ்சியம், 1985)