பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வாழ விரும்பியவள்

மாதவிக் குட்டி பார்ப்பதற்கு மான்குட்டி மாதிரி இருக்கிறாள். பூச்செண்டு போல் குளுமையாய், வர்ணமயமாய்த் திகழ்கிறாள். அதெல்லாம் சரிதானப்யா. அவள் மோகனப் புன்னகையையும், காந்தக் கண்ணொளியையும், கண்டு நீர் தப்பித் தவறி அசட்டுத்தனமாக நடந்து கொள்ளாதீர். உண்மையில் அவள் நெருப்பு ஐயா, சுட்டெரிக்கும் நெருப்பு!'

இப்படித்தான் எச்சரிப்பார் கிளார்க் பரமசிவம். சக குமாஸ்தாக்களில் எவராவது ஒருவர் அவரிடம் மாதவியைப் பற்றி அவ்வப்போது பேச்செடுப்பார்கள். அல்லது, அவரைக் கண்டு பேச வருகிறவர்களில் யாரேனும் மாதவிக் குட்டியின் 'நிலவு செய்யும்' முகத்தையும், காண்போர் நெஞ்சில் குறுகுறுப்பு ஏற்படுத்தும் விழிகளையும், நினைவில் நிலையாகப் பதிந்து விடுகிற முறுவலையும் பார்த்துவிட்டு, அவள் நினைவினால் அலைப்புண்டு, அப்புறம் பரமசிவத்திடம் அவளைப் பற்றிச் சுவாரஸ்யமாகப் பேச ஆரம்பிப்பார்கள். அப்போதெல்லாம் அவர் தனி ரகச் சிரிப்பை முகத்திலே படரவிட்டுத் தனது கருத்தை அழுத்தமாக எடுத்துச் சொல்வார்.

பரமசிவம் பணி புரிந்த அலுவலகத்தில் பல பிரிவுகள். ஒவ்வொரு பிரிவிலும் நாலைந்து ஆண்களோடு ஒன்று அல்லது இரண்டு பெண்களும் குமாஸ்தாக்களாக வேலை செய்து வந்தார்கள். அவர்கள் எல்லோருமே அழகிகள் என்று சொல்லிவிட முடியாது, ஆனால் அனைவரும் ஒய்யாரமாக அழகு படுத்திக் கொள்ளத் தெரிந்தவர்கள்.

பெண் குமாஸ்தாக்கள் வேலை பார்க்கிற இடத்தில் சரிநிகர் சமானமாக, ஆண்களும் வேலை செய்ய வேண்டியிருந்ததன் மூலம வேலையின் தரம் எப்படி இருந்தது; ஆண்களின் உழைப்புத் திறம் எத்திசையில் எவ்வாறு வேலை செய்தது; பெண் சக்தி யார் யாரை எந்த எந்த விதமாகப் பாதித்து வந்தது என்பன போன்ற விவரங்கள் யாவராலும் சேகரிக்கப்பட வில்லை. ஆயினும் ஒர் உண்மை எளிதில் பளிச்சிடத்தான் செய்தது.

பெண்கள் மேனி மினுக்கிகளாகவும், அலங்கார வல்லியராகவும், நாளுக்கொரு தினுசுப் புடவை கட்டியும், சதா வாசன