பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

அலைகளைப் பரப்பியும், இரண்டு மூன்று பேர்களாகச் சேர்ந்து அர்த்தமில்லாமல் கிளுகிளுத்துச் சிரித்துக் கொண்டும் ஆபீசுக்கு வந்தார்கள். அவர்களது புறத் தோற்றத்தில் காணப்பட்ட அழகும் சுத்தமும் அவர்கள் செய்த வேலைகளில் இருக்குமா - இருந்ததா - என்று உறுதியாக யாரே சொல்ல முடியும்?

அவர்கள் பார்வையில் பட்டும், அவர்களுக்கு அருகே உட்கார்ந்தும், அவர்கள் பார்க்கட்டுமே என்பதற்காகவும் ஏதோ முக்கிய காரியம் இருப்பதுபோல் அங்கும் இங்குமாக, ஒர் அறையிலிருந்து இன்னோர் அறைக்குமாய் சும்மா சும்மா போய் வந்து கடமை ஆற்றிய ஆண்குமாஸ்தாக்கள அசமஞ்சங்களாகவும், பித்துக் குளிகளாகவும், ஏழை எளியவர்கள் போலவும், 'கேவலம் குமாஸ்தாக்கள்’ ஆகவும் காட்சி அளிக்கலாமா? அப்படிக் காட்சிதரத்தான் இயலுமா அவர்களால்?

ஆகவே, ஒவ்வொருவரும் 'ஜம்' எனறு 'ஜோர்’ ஆகவும், 'டீக்’ ஆகவும், 'டிப்டாப்' ஆகவும் ஆடை அலங்காரம் செய்து கொண்டு வந்தார்கள். சிலர், சினிமாவில், நடிக்க வேண்டிய வர்கள் தப்பித் தவறி, சாரமற்ற வேலைகள் நடைபெறும் அலுவலகத்தினுள் அடி எடுத்து வைத்து விட்டவர் போல் தோன்றினார்கள்.

இதனால் என்ன ஆயிற்று என்று கேட்டாலோ, காரியாலயங்கள் கண்ணுக்கு இனிய காட்சிகளாகத் தோற்றம் காட்டலாயின. ஆபீஸ் கட்டிடங்களுக்கே உரித்தான அழுமூஞ்சித் தோற்றமும் ஒருவித விசேஷ நாற்றமும் இருந்த இடம் தெரியாமல் ஓடி விட்டன.

சுமார் அழகு பெற்ற நாரீமணிகள் சஞ்சரித்த பகுதிகளின் நிலையே இது வென்றால், மாதவிக்குட்டி போன்ற அழகான பெண்கள் வேலை செய்யும் பிரிவுகள் எப்படி இருக்கும் என்று தெரியாதா என்ன!

மாதவிக்குட்டி நல்ல அழகி. இவ்வளவு சொன்னாலே போதும். அவள் மல்கோவா மாம்பழம் போல் இருந்தாள் என்ற தன்மையில் வர்ணிக்க ஆரம்பித்துப் பழக்கடைக்கும் - அவள் கன்னங்களில் ரோஜாப்பூ சிரிக்கும், கண்களில் கருங்குவளை மின்னும் என்னும் தினுசில் தொடங்கிப் பூக்கடைக்கும் - அவள் மேனி மெருகில் பாதாம் அல்வாவைக் காணமுடியும், சரும மென்மையில் வெண்ணெய் மினுமினுக்கும், அவள் குரலில் குலோப் ஜான் ஊறிக் கிடக்கும் ஜீரா இழையும் என்றெல்லாம் விவரித்து மிட்டாய்க் கடைக்கும் - விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை தான்.