பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ விரும்பியவள் 89

அவளுடைய போக்கை தவறாகப் புரிந்துகொண்ட ஆண்கள் அவள் மனம் தங்களிடம் நிலைபெற்று விட்டது என்றே எண்னினார்கள். ஒவ்வொருவரும் தானே மாதவியின் பிரியத்துக்கு இலக்கானவர் என்று கருதியது மனித சுபாவத்தை எடுத்துக் காட்ட உதவியது.

ரகுநாதன் ஒரு நாள் டிபன் சாப்பிட்டு விட்டு வரும் போது தன் வாயில் ஒரு பீடாவும் கையில் ஒரு பீடாவுமாக வந்தான். உதடுகள் சிவக்க, வாய் நறுமணம் பரப்ப, முகம் மலர வந்தவனைச் சிரிக்கும் விழிகளால் வரவேற்றாள் மாதவி. குறுநகை விருந்து தந்தாள்.

'உங்களுக்குப் பீடா வேண்டுமா மாதவி?’ என்று கேட்டான் ரகுநாதன்.

'கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன்? என்று கேள்வியில் பதிலைப் பொதிந்து கொடுத்தாள் அவள்.

அவள் வாங்கிக் கொள்வாளோ மறுத்து விடுவாளோ என்ற சலன சித்தத்தோடு அதிகப்படியான பீடா வாங்கி வந்தவன் இப்பொழுது ஆனந்தம் அடைந்தான். 'இதோ!' என்று கையை நீட்டினான்.

தந்தத்தினால் கலை அழகோடு உருவாக்கப்பட்டன போன்ற மெல்லிய விரல்கள் முன் வந்து, பூவிதழ்கள் போல் குவிந்து, பீடாவை எடுத்ததை அவன் ரசித்தான். அவள் கைமேலே சென்று, செவ்விய உதடுகளுக் கிடையே அதைத் திணித்ததையும், கண்கள் சுழன்றதையும், முகத்தின் மாறுதல்களையும் ஆசைக் கண்களால் அள்ளி விழுங்கியவாறே நின்றான் அவன். அவள் கண்களில் ஒளிர்ந்த தனிச்சுடர் அவனுக்காகவே பிறந்தது அல்லவோ!

அவன் உள்ளம் கிளுகிளுத்தது. 'மாதவிக்கு என் மீது ஆசை தான். இதில் சந்தேகமேயில்லை' என்று உறுதியாக நம்பினான் அவன்.

'உனக்கு விருப்பமானதை எடுத்துக் கொள்ளலாம்' என்று சொல்லி, மூடியிருந்த விரல்களை அகலத் திறந்தான் பால கிருஷ்ணன், ஒரு சமயம்.

உள்ளங்கை நிறைய மிட்டாய்கள். பளிச்சிடும் வர்ணங்கள் மினுக்கும் கண்ணாடித் தாள்களில் அடங்கிய அருமையான இனிப்புகள்!

பொன்வளை ஒன்று அழகு படுத்திய எழிலான கை முன் வந்து ஒரே ஒரு மிட்டாயை எடுத்துக் கொண்ட போது, 'பொன்