பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ விரும்பியவள் 91

பிறகே குமாஸ்தாக்கள் வெளியேற வேண்டும். வீணாகக் கால நஷ்டம் உண்டு பண்ணுகிற ஆபீஸரை ஏசியாவது அவர்கள் வேலை செய்வது போல் பம்மாத்துப் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.

அன்று ஆபீஸர் ஆறே கால் மணிக்குத்தான் போனார். மேஜை மீது கிடந்த 'குப்பை'களை எல்லாம் அள்ளி டிராயருக்குள் திணித்து விட்டு, குமாஸ்தாக்கள் புறப்படுவதற்கு ஆறரை மணி ஆகிவிட்டது.

ஆறு ஆறேகால் மணிக்கே இருள் பரவி விடுகிற - 'பகல் பொழுது குறைவாகவும் இராப் பொழுது அதிகமாகவும் உள்ள' - காலம் அது. ஆபீஸின் அறைகளுக்குள் விளக்குகள் ஒளி சிந்தி அழுது கொண்டிருந்தாலும், வராந்தா, மாடிப்படி, சில திருப்பங்கள் போன்ற இடங்களில் வெளிச்சமே இல்லை.

மாதவி வேலை செய்யும் இடம் மாடியில் இருந்தது. அவள் வேகமாக வந்து படிக்கட்டுத் திரும்பினாள். 'மாதவி! உனக்காகத் தான் காத்திருக்கிறேன்' என்ற குரல் கரகரத்ததும் அவள் திடுக்கிட்டாள்; நின்றாள். அதற்குள் ஒரு கரம் அவள் கையைப் பற்றி அவளை அருகே இழுக்க முயன்றது. இடுப்பில் வளைந்து சுற்ற நீண்டது.

'இன்று மில்க் சாக்லட் மட்டுமல்ல; ஹேஸல்நட் சாக்லட்டும் கொண்டு வந்திருக்கிறேன். இப்படி நாம் ஜாலியாக பீச்சுக்குப் போகலாம்...'

பேசியது பாலகிருஷ்ணன் என்பதை முதலிலேயே புரிந்து கொண்ட மாதவியின் உடல் படபடத்தது. அவள் இதயத்தில் பதைபதைப்பு. "சீ போ!' என்று சீறினாள் அவள். அவனைத் தள்ளிவிட முரண்டினாள்.

அவன் முகம் அவள் முகம் நோக்கித் தாழ்ந்து கொண்டிருந்தது. திடுமென, 'பளார்' என்று ஒர் அறை விழுந்ததும் அது அதிர்ச்சியோடு பின்வாங்கியது.

'சீ மிருகம்!’ என்று தன் வெறுப்பு முழுவதையும் திரட்டி வீசிவிட்டு, அவனை வலுவுடன் ஒதுக்கித் தள்ளிய மாதவி வேகமாகப் படிகளில் இறங்கினாள்.

அப்பொழுது தான் மாடிப்படியில் ஏற அடி எடுத்து வைத்த ரகுநாதன் 'ஏன் மாதவி இவ்வளவு அவசரம்?’ என்று கேட்டான்.

"சீ போடா!' என்று காறித் துப்பி விட்டு ஓடலானாள் மாதவி. ரஸ்தாவை அடைந்ததும் எதிர்ப்பட்ட முதல் டாக்சியை நிறுத்தி, அதில் ஏறிக்கொண்ட பிறகு தான் அவள் பயம் சிறிது தணிந்தது. ஆயினும் உள்ளப் பதைப்பு ஒடுங்கவில்லை.