பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ விரும்பியவள் 93

அவள் மனசைக் குளிப்பாட்டி, அவள் உள்ளத்தில் இடம் பிடிப்பதற்காகத் தானே நீங்கள் போட்டி போட்டு அவ்விதம் செய்தீர்கள்? உபசரித்து, நல்ல வார்த்தை சொல்லி, நீங்களாக வாரிக் கொடுக்கிற போது, வேண்டாம் என்று யார் தான் மறுப்பார்கள்? மாதவிக்குத் தினசரி ஸ்வீட்டும், ஐஸ்கிரீமும், சாக்லட்டும் வாங்கித் தின்னவேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்படி எல்லாம் தின்ன ஆசைப் பட்டால் வீடு விட்டுப் போகும் மகளே; நமக்குக் கட்டுபடி ஆகிவராது என்று அவளுடைய அம்மா சொல்லியிருப்பாள். சுலபமாகச் சிரிப்பையும் பார்வையையும் இனிய பேச்சையும் கொண்டே அவற்றை எல்லாம் பெற்று விட முடியும் என்பதை அவள் கண்டு கொண்டாள். கிடைக்கிற வரையில் அனுபவித்து மகிழலாமே என்று துணிந்தாள். அவளுக்குக் கொடுப்பதில் உங்களுக்கும் ஒர் இன்பம் ஏற்பட்டது. இல்லை என்று நீங்கள் மறுக்க முடியாது. அப்புறம் அவளை ஏசுவானேன்?’ என்றார் பரமசிவம்.

மற்றவர்களால் அவர் பேச்சை மறுக்க முடியவில்லை. எனினும், அவர்களுடைய மனக்கசப்பை மாற்றுவதற்குத் தேவையான சக்தியை அவ்வார்த்தைகள் பெற்றிருக்க வில்லை தான.

('கலாவல்லி, 1965)


ஒரு காதல் கதை:

ப்பொழுது நான் தூங்கவில்லை - தூக்கக் கிறக்கத்திலே தோன்றிய சொப்பனமாக இருக்கும் என்று அதைத் தள்ளி விடுவதற்கு.

உண்மையைச் சொல்லப்போனால் அப்போது நான் விழித்திருக்கவும் இல்லை; கண்களை மூடிக்கொண்டு, யோசனையில் ஆழ்ந்து கிடந்தேன், முதுகெலும்பு இல்லாத ஜீவன் மாதிரி நாற்காலியில் சரிந்து சாய்ந்தபடி.

அப்படி என்ன பலமான யோசனை என்றால், சுவையான கதை என்ன சொல்லலாம்; ஒரு கதை அவசியம் வேண்டுமே என்கிற வேதனைதான். பக்கத்து வீட்டுப் பன்னிரண்டு வயது பெண் பர்வதகுமாரி எனது சிநேகிதி. அவளை "ஓயாத தொல்லை" என்றே கூப்பிடவேண்டும். எப்போ பார்த்தாலும் "எனக்கு ஒரு கதை சொல், ஜோரான கதையாக ஒன்று சொல்" என்று அரித்துப் பிடுங்கும் சுபாவம் உடையவள் அவள்.