பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 வல்லிக்கண்ணன் கதைகள்

"எனக்குக் கதை சொல்லத் தெரியாது” என்று மழுப்பி அவளிடமிருந்து தப்பிவிட முடியாது. "ஊக்குங் உனக்கா தெரியாது? இவ்வளவு புஸ்தகங்கள் படிச்சிருக்தியே! இன்னும் படிச்சுகிட்டே இருக்கியே. உனக்கு கதை சொல்லத் தெரியாது என்றால் யார் நம்புவாங்க?" என்று சண்டை பிடிக்கும் பண்பும் அவளுக்கு உண்டு. -

என்ன எழவாவது ஒரு கதையை சொல்லி அவளை அனுப்பினால்தான் அமைதியாகப் படிக்கவோ. சும்மா கண்மூடி மோனத்து இருக்கவோ இயலும். இல்லையெனில் கொசு, மூட்டைப்பூச்சி வகையரா மாதிரி அவளும் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பாள்.

அன்றைக்கும் அவள் "கதை ஒரு கதை" என்று தொந்தரவு படுத்திவிட்டு, "நல்ல கதையாக ஒன்று யோசித்து வை. நான் அப்புறம் வாறேன்" என அறிவித்து விட்டுப் போனாள். அதைப்பற்றிய யோசனையில்தான் நான் ஈடுபட்டு இருந்தேன்.

விழிப்பும் தூக்கமும் தொட்டுப் பிடித்து விளையாட முயலும் இடை நிலை அது. மனம் கட்டவிழ்த்து விடப்பட்ட கன்றுக் குட்டி மாதிரி துள்ளிக்கும்மாளம் போட்டு இஷ்டம் போல் திரியும். காதருகில் கூட யாரோ - அல்லது, எதுவோ "கொய கொய" என்று தெளிவில்லாக் குரலில் என்னென்னவோ பேசுவது போல் தோன்றும். அத்தகைய நிலையில்தான் நான் இருந்தேன்.

அப்பொழுதுதான் அது என் காதில் விழுந்தது. மிகத் தெளிவாகக் கேட்டது. யாரோ கலகலவெனச் சிரித்த ஒலி. வெண்கலப்பானையில் சில்லரைக் காசுகளைப் போட்டுக் குலுக்கி உலுக்கினால் எழக்கூடிய ஒலிநயம் கலீரிட்டது அந்தச் சிரிப்பிலே.

யார் அவ்விதம் சிரித்தது?

நான் கண்விழித்து மிரளமிரள நோக்கினேன்.

பழக்கமான, அழுது வழியும் சூழ்நிலைதான். புத்தகங்கள், தாள், பேனா, குப்பை கூளம், 'சப்புச்சவரு' எல்லாம் அப்படி அப்படியே இருந்தன, யாரும் வந்து எட்டிப் பார்த்ததாகவும் தெரியவில்லை. பக்கத்து விட்டுக் குறும்புக்காரப் பெண் பர்வதகுமாரியின் சிரிப்பும் அல்ல அது. -

என் மனக்குறளியின் சித்து விளையாட்டாகத்தான் இருக்கும் என்று கருதி, மறுபடியும் "தூங்காமல் தூங்கி சுகம் பெறும்" நிலையில் அமர்ந்தேன். ஆனால், தூக்கம் என் கண்களைத் தழுவி என்னை மயக்க நிலையில் தள்ளிவிடவில்லை. இது நிசம்.