பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு காதல் கதை! 95

திரும்பவும் சிரிப்பொலி தெளிவாகக் கேட்டது. பெண் ஒருத்தி சிரித்த குரல்தான் அது.

நன்றாகப் பார்த்தும் பயனில்லை. யாரும் பார்வையில் படவேயில்லை. "ஏ குரங்கு! ஏட்டி பான குமாரி! எங்கே ஒளிந்து நிக்கிறே? என்று கத்தினேன்.

இப்போது கேலிச் சிரிப்பொலியோடு, கைகொட்டிக் கனித்ததால் எழுந்த வளைகளின் கலகலப்பும் சேர்ந்து ஒலி செய்தது. எனக்கு எதுவும் புரியவில்லை.

"ஹே கற்பனை வறண்ட கதைக்காரா! உனக்கு கதை எதுவும் உதயமாகாததில் வியப்பே இல்லை என்பது பாயசத்தில் உள்ள இனிப்பு போலவும், மிளகாய்ப் பொடியில் உள்ள காரம் போலவும், உப்பில் உள்ள கரிப்பு போலவும் நன்கு புலனாகின்றது...'

இவ்வாறு அதிகப்பிரசங்கி தனமாக வாயாடும் வல்லமை பெற்றது யாரோ என்று நான் விழித்துக் கொண்டு இருக்கையில், "முன்னே செல்லும் தலை அலங்கார சிங்காரியின் கொண்டையில் கொலுவிருக்கும் மல்லிகை மனத்தை நுகர்ந்தாலும், இங்கே பூ வாசனை எப்படி வந்தது, செடியுமில்லை தோட்டமும் இல்லையே என்று முழிக்கும் பண்பு பெற்ற மக்கு பிளாஸ்திரியின் சரியான பிரதிநிதியே! நான் உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா? என்ற பேச்சு "தொலைபேசி" மூலம் வரும் குரலிழை போல் இழுபட்டு மென்மையாய் ஒலித்தது என்னருகிலே. -

யார் பேசுவது என்று புரிந்துக் கொண்டதும் எனக்கு வியப்பு அதிகமாயிற்று.

என் முன்னால் மேஜைமீது ஒரு வெண்கலப் பொம்மை இருந்தது. மிகுந்த அழகு என்று சொல்ல முடியாது. நானும் சில நண்பர்களும் ஊர் சுற்றி, அணைக்கட்டுகளைப் பார்த்துவிட்டு, ஒரு பெரிய கோவிலைக் கண்டுகளித்துத் திரும்பிய சமயம், ஒரு இடத்தில் இந்தப் பதுமை விலைக்குக் கிடைத்தது. பலரும் பல பொருள்களை வாங்கினார்கள். சும்மா இருக்கட்டுமே என்று நான் இந்த பொம்மையை வாங்கி வந்தேன். அதனுள்ளே எப்பவாவது "விக்கிர மாதித்த வேதாளத்தின்" தாயாதி எதுவேனும் புகுந்துக் கொள்ளும்; பதுமை கதை சொல்ல முன்வந்து விடும் என்று நான் கண்டேனா?

எனது எண்ணங்களை உணரும் சக்தியைக்கூட அந்தப் பதுமை பெற்றுவிட்டதாகத் தோன்றியது.