பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்

2

 "அவனை எதுதான் என்ன செய்ய முடியும்? அவனே ஒரு பேய்தானே!" இவ்வாறு பலரது பேச்சுக்கும் பொருளாகித் திரிந்த காத்தலிங்கம் நல்லவனுக்கு நல்லவன்; பொல்லாதவனுக்குப் பொல்லாதவன்' என்று பெயர் எடுத்திருந்தான்.

அவன் நல்லவனாக இருப்பதும், அல்லாதவனாக மாறுவதும் அவனுக்குள்ளே, போகிற சரக்கின் தன்மையைப் பொறுத்தது என்று ஊர்க்காரர்கள் சொல்வார்கள். அதில் உண்மை இல்லை என்று தள்ளிவிட முடியாது. ஆனால், அவனுக்குன்னே காட்டமான சரக்கு எப்போது புகுந்திருக்கிறது, அல்லது எப்பொழுது அவன் சுய அறிவுடன் இருக்கிறான் என்று சொல்வது சிரமமான காரியமாகும். அவன் முகத்தில் இயல்பாகவே ஒரு கடுரம் குடியிருந்தது. அவன் கண்கள் வெறித்த பார்வை உடையன; அடர்த்தியாக வளர்ந்து முறுக்கேறி நிற்கும் மீசை அவன் முகத் தோற்றத்தைப் பயங்கரமாகச் சித்திரிக்கப் பெரிதும் துணை புரிந்தது. காத்தலிங்கம் நன்கு வளர்ந்து வாட்ட சாட்டமாக இருந்தான். அவனைக் காண்கிற சிறுபிள்ளைகள் உள்ளத்தில் பயம் எழும். பெரியவர்கள் மனசில் ஒருவித மரியாதை தோன்றும். அவன் குடித்துவிட்டுக் கையிலே தடியும் இடுப்பில் கத்தியுமாகக் கிளம்பிவிட்டாலோ, பெரியவர்கள் உள்ளத்திலேகூடப் பயம்தான் தலையெடுத்து நிற்கும்.

‘இந்தக் காத்தலிங்கம் வம்புச் சண்டைக்குப் போக மாட்டான். ஆனால், வந்த சண்டையை விடவும் மாட்டான். ஆமா. காத்தலிங்கம் எப்பவும் நியாயத்தின் கட்சி. அநியாயமானது எதையும் அவன் செய்யவே மாட்டான்!’ இவ்வாறு காத்தலிங்கமே அடிக்கடி ஒலிபரப்புவது வழக்கம்.