பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5 வல்லிக்கண்ணன் கதைகள்


அன்று காத்தலிங்கத்துக்கு வழக்கமான உற்சாகத்தை விட அதிக அளவு குஷி இருந்திருக்க வேண்டும். இல்லையெனில், வெறும் சீட்டியடிப்போடு ஊர் சுற்றுகிறவன் வாய் திறந்து பாடத் துணிந்திருப்பானா? பாட்டும் வழக்கமாக அவன் பாடுவது அல்ல.


“தண்ணிக்குப் போ மகளே,
 
தலை குனிந்து வா மகளே!

மோட்டாரு டைவரைக் கண்டால்

மொகம் கொடுத்துப் பேசாதேடி!”

என்று கத்தினான். திரும்பத் திரும்ப ஊளையிட்டான். அந்தப் பாட்டிலே அவனுக்கு அத்தனை லயிப்பு!

‘ஏது காத்தலிங்கம், இன்னிக்குப் பாட்டு பிரமாதமாக இருக்குதே?’ என்ற குரல் அவனை உலுக்கியது. பெரிய வீட்டு ராமையாப் பிள்ளைதான் பேசினார்.

காத்தலிங்கம் கூழைக் கும்பிடு போட்டான். ‘என்ன ஐயா, இந்த நேரத்திலே எங்கே போயிட்டு வாரிக?’ என்றான்.

அவர் லேசாகச் சிரித்தார். ‘என்னடே காத்து, தினசரி ராத்திரி இப்படித் திரிகிறியே? நீ தூங்குவதுதான் எப்போ? உனக்குத் தூக்கமே வர்றதில்லையா?’ என்று கேட்டார்.

‘தூக்கமாவது ஒண்ணாவது!... தூங்கையிலே போகிற மூச்சு சற்றே சுழிமாறிப் போனாலும் போச்சு... இதை நீட்டி இழுத்துப் பாடிவிட்டு, அதனாலே நான் ராத்திரி வேளைகளில் தூங்குவது கிடையாது’ என்று காத்து சொன்னான்.

அப்ப பகல் வேளையிலே நன்றாய்த் தூங்குவீர் போலிருக்கு! என்றார் ராமையாப் பிள்ளை.