பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன் 6

 ‘கெக் கெக்’ என்று விசித்திரமான சிரிப்பொலி எழுப்பினான் அவன். ‘ஐயா, ஒரு விஷயம். இந்தக் காத்தலிங்கமும் ஒரு யோகின்னுதான் சொல்லணும். ஏன்னு கேட்டியளா? ஒரு பிரசங்கியா பிள்ளை ஒருநாள் சொல்லிக்கிட்டிருந்தாரு. ஊர்க்காரர்கள் தூங்குகிறபோது யோகி விழித்திருக்கிறான். மற்றவர்கள் விழித்திருக்கும் வேளையில், யோகி தூங்குகிறான்' அப்படீன்னாரு. காத்தலிங்கமும் அதையேதான் செய்கிறான். என்ன ஐயா நான் சொல்றது?’ என்றான்.

‘ஆகா!’ என வியந்து பாராட்டினார் பிள்ளை திடீரென்று தினைத்துக் கொண்டவர் போல் சொன்னார்: ‘காத்தலிங்கம் நான் ஒண்னு சொல்றேன் கேளு. நீயோ ராத்திரி நேரங்களிலே துங்கப் போறதில்லே. ஒரு இடத்தில் உட்காந்திருப்பதும் உனக்குப் பிடிக்காது. இப்படி வெட்டியாகத் திரிந்து வீண் பொழுது போக்குவதையே வேலையாக மாற்றி, சம்பளமும் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கு. நீ வேலை பார்க்கத் தயாரா?’

என்னய்யா கேலி பண்றீங்களா? என்று கடுப்பாகக் கேட்டான் அவன்.

கேலி இல்லை காத்து. நிசமாத்தான் சொல்றேன். பண்ணையார் ராசாப்பிள்ளைவாள் இருக்காகளே, அவுக எஸ்டேட்டுலே மரம் மட்டையின்னு திருடு போகுதாம். சரியான காவல்காரன் ஒருவனை நியமிக்கணுமுன்னு பார்க்கிறாங்க.. காவல் வேலைக்கு ஏற்ற ஆளு இருந்தால் சொல்லுங்கன்னு எஸ்டேட் கணக்குப்பிள்ளை என்னிடம் சொன்னாரு. அவருகூடப் பேசிக்கிட்டு இருந்துவிட்டுத்தான் வாரேன் என்று பிள்ளை கூறினார்.

வேலையா! எனக்கா? ஹெஹஹே’ என்று கனைத்தான் காத்தலிங்கம்.