பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

87

போன்ற ஏழைகள் சாகாமல் இருப்பதே தப்பு என்பதுபோல், அவளைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். பலவீனமாக நோக்கினார்கள். அந்த பலவீனத்தை தனது பலமாக எடுத்துக்கொண்ட வீட்டுக்காரி, இப்போது மல்லிகாவை நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டே, மேலிருந்தபடியே கேட்டாள்:

"மல்லிகா! இது என்ன, தியாகராய நகர் வீடுன்னு நினைக்கிறியா? அம்மாதான் முறைவாசல் பண்ணலன்னா, நீ கூட பண்ணப்படாதா? பெரிய ராணின்னு நினைப்போ? மரியாதையா துடைப்பத்தை எடுத்து சுத்தம் பண்ணு. இல்லன்னால், நாளைக்கே காலி பண்ணுங்கோ. சீச்சி பேமானி ஜனங்க. சேற்றுல புரள்றவங்களை வீட்டுல வச்சால் இப்படித்தான். சீச்சீ."

மல்லிகாவிற்கு, கோபத்தைவிட வருத்தமும், மற்ற பெண்களுக்கு வருத்தத்தைவிடக் கோபமும் ஏற்பட்டன. மல்லிகாவிற்கு, ஏதோ ஒரு சோகம், ஏதோ ஒரு வெறி மடமடவென்று எழுந்து, ஒரு மூலையில் கிடந்த பொதுச்சொத்தான ஒரு துடைப்பத்தை எடுத்துக்கொண்டு, குழாயடியருகே, அவளைப்போல் காதறுந்து போய்க் கிடந்த ஒரு 'பைட்டியையும்" எடுத்துக்கொண்டு, சக பெண்களைப் பரிதாபமாகப் பார்த்தாள். அவள் கண்களில் தேங்கிய நீர் அந்தப் பெண்களின் கண்களில் நெருப்பாக மாறியது. அவளது தவிப்பு, அவர்களிடம் கோபத்தணலாகப் போனது. அவளது திகைப்பு, அவர்களிடம் ஒரு தீர்மானமான முடிவாகப் போனது.

'கொத்து' வேலைப் பெண்ணான ராக்கம்மாள், எல்லோருக்கும் பொதுவாக. வீட்டுக்கார அம்மாவிடம் நிதானமாகக் கேட்டாள்.

"வீட்டுக்காரம்மா, நீ பண்றது கொஞ்சமும் நாயமில்ல. யாரையும் இப்படி அட்டகாசமா பேசாதம்மா. அதான் சொல்லிப்புட்டேன்."

'இட்லி' ஆயா இன்னொரு எதிர்க் கேள்வியைப் போட்டாள்.

"குயந்தே, நீ செய்றது நல்லா இல்ல. குயந்தே நல்லா இருக்கோமுன்னு திமிரா பேசாதே குயந்தே நானுகூடத்தான் பர்மாவுல ஒரு பங்களா வச்சிருந்தேன். ஜப்பான்காரன் குண்டுக்குப் பயந்து ஓடிவரச்ச ஆம்புடையானையும் பிள்ளிகளையும் குண்டுக்குப் பறிகொடுத்துட்டு இங்கே வந்தவள் குயந்தே! பங்களாவும் மோட்டார் பைக்கும் வச்சிருந்தபோதுகூட நானு யாரையும் மதிக்காமல் பேசுனதுல்ல. எனக்கே இந்த கதின்னா உனக்கு எந்த கதின்னு நெனைச்சிப்பாரு குயந்தே. இந்தப் பச்சக் குயந்தையை இப்படி அடாவடியா பாய்றதுக்கு எப்படிக் குயந்தே மனசு வருது?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/101&oldid=1134128" இலிருந்து மீள்விக்கப்பட்டது