பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

97

மல்லிகா நடப்பதைப் பார்த்துக்கொண்டு நின்றாள். பிறகு மூச்சை இழுத்துப் பிடித்தாள். ஏதோ ஒன்று. அவளுள் பிறந்து, அவளுள் வளர்ந்து. அவளுள் நின்று, அவளைவிட பெரிதானதுபோல் தோன்றியது. கல்லூரி மேடைப்பேச்சின் போது நிற்பாளே... அப்படிப்பட்ட கம்பீரம்... அப்படிப்பட்ட அஞ்சாப் பார்வை.

"எக்ஸ்கியூஸ் மீ... நீங்க சப்-இன்ஸ்பெக்டர்தானே..."

"பார்த்தால் எப்படித் தெரியுது?"

"சார்... இந்த அகங்காரமான பேச்சு வேண்டாம். நீங்கள் நடந்ததை விசாரிக்காமலே ஒருத்தரை மட்டும் உதைக்கப் போகிறது சட்ட விரோதம். இந்த அம்மாவோட அண்ணன் இன்ஸ்பெக்டர். அவரோட செல்வாக்குல நீங்கள் வந்திருக்கிங்கன்னு தெரியும். இவன்... என்னைக் கெடுக்க வந்தான். என் அண்ணா அவனை தற்காப்புக்காக அடித்தது உண்மைதான். நான் இப்பவே புகார் எழுதித் தாரேன். கெடுக்க முயற்சி செய்கிறவனை நீங்கள் பதினைந்து நாள் காவலில் வைக்கணும் நான் வேணுமுன்னாலும் ஸ்டேஷனுக்கு வாரேன். இப்படி இல்லாமல், அண்ணனை மட்டும் நீங்க கூட்டிக்கிட்டு போறதாய் இருந்தால், நான் போலீஸ் கமிஷனர்கிட்ட போயிட்டு, அப்படியே முதலமைச்சர் கிட்டயோ கவர்னர் கிட்டயோ போகவேண்டியதிருக்கும்."

மல்லிகா ஆங்கிலத்திலேயே பேசினாள் - தாய்மொழியில் பேசுவதை அதிகாரிகள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்ற அவல நிலையை உணர்கிறவள்போல.

சப்-இன்ஸ்பெக்டர் சிறிது யோசித்துவிட்டு, "மிஸ்டர் ரமணன். நீங்களும் ஸ்டேஷனுக்கு வாங்க. யோவ்! கந்தசாமியோட கையை விடுய்யா." என்றார்.

ரமணன், அக்காளுக்குப் பின்னால் ஒளிந்தான். "அண்ணா போன் போட்டு சொன்ன பிறகும்... இவனையா கூப்பிடுறீங்க..." என்று வீட்டுக்காரி சொன்னபோது, மல்லிகா, பிடிக்கவேண்டிய இடத்தைப் பிடித்தாள்.

"பார்த்தீங்களா சார்... என் அண்ணா அவரை அடிச்சார்னு நீங்கள் வரவில்லை. யாரோ போன் பண்ணினாங்கன்னு. நீங்கள் வந்திருக்கீங்க..."

சப்-இன்ஸ்பெக்டருக்கு. வீட்டுக்காரி மீது கடுமையான கோபம். துப்புக்கெட்ட மூதேவி அப்பன், குடிலுக்குள் இல்லைங்கிறது மாதிரி... போன் சமாச்சாரத்தை சொல்றாளே..!

பிறகு சப்-இன்ஸ்பெக்டர் வந்த வேகம் எங்கேயோ போக, சிரித்துக்கொண்டே பேசினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/111&oldid=1134179" இலிருந்து மீள்விக்கப்பட்டது