பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

101

இடமெல்லாம். ஆயாவின் உடம்பு முழுவதும் ஒட்டுமொத்தமாக பூசணிப்பழம் மாதிரி அலைக்கழிவதைப் பார்க்கப் பார்க்க. அவளுக்குத் தான் என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை. வீட்டுக்காரியின் கையைப் பிடித்து மடக்கித் தள்ளினாள். அந்த வேகத்தில், வீட்டுக்காரி எதிரே இருந்த குறுந்திண்ணையில் நெற்றி மோத, அலங்கோலமாக விழுந்தாள். அதைவிட அதிக அலங்கோலமாக சத்தம் போட்டாள்.

"என்னையாடி... அடிச்சிட்டே... என்னையாடி... அடிச்சிட்டே... அய்யோ... எனக்குத் தலை சுத்துதே... தலை சுத்துதே..."

கீழே கிடந்த வீட்டுக்காரியை, ராக்கம்மா தூக்கி நிறுத்த முயற்சி செய்தபோது, தரையில் தேய்த்ததால் சிராய்ப்பாகி, மரத்தின் பட்டையைக் கீறினால், செக்கச் செவேலென்று வரும் மரச்சதை மாதிரி ஆயாவின் சதைப்பகுதியில் ரத்தம் கசிந்தது. ஆயா அதைக் கையால் பிதுக்கிப் பார்த்துக்கொண்டே மெளனமாகப் பார்த்தாள்.

இதற்குள் சத்தங்கேட்டு, மல்லிகா உட்பட எல்லோரும் வந்தார்கள். ரமணன் அக்காவை வந்து தாங்கிப் பிடித்துக் கொண்டான். வீட்டுக்காரி, பிரளயப் புலம்பலை பிரசவித்தாள்.

"பிளான் போட்டாடி வந்தீங்க? என்னை கை நீட்டியாடி அடிச்சே... அடிச்ச கையில... காப்பு மாட்டுறேனா... இல்லியான்னு பாரு. ஒரு அடிக்கு... ஒன்பது அடி வாங்கித் தராட்டால்... என் பேரு... என்... பேரு..."

வீட்டுக்காரி, தன் பெயரையே ஞாபகப்படுத்த முடியாமல் திணறிவிட்டு, பிறகு "ஏ... ரமணா... போலீஸுக்கு... போன் பண்ணிட்டு வாடா... இன்னுமாடா நிக்கே... எருமை மாடு..." என்றாள்.

ரமணன், வெளியே ஓடினான். ராக்கம்மா, வீட்டுக்காரியை பயந்தவள் மாதிரியும், பயப்படுத்துகிறவள் மாதிரியும் பார்த்துக் கொண்டிருந்தபோது, மல்லிகா, ஆயாவின் குருதி படர்ந்த கால் பகுதியைக் கைக்குட்டையால் துடைத்துவிட்டு. அக்காள் சந்திராவைப் பார்த்தபோது, அவள் வீட்டுக்குள் போய், எண்ணெயை ஊற்றி, ஆயாவின் காலில் தேய்த்தாள். கட்டிய கணவனையும், பெற்ற பிள்ளைகளையும் 'குண்டு'க்குக் கொடுத்துவிட்டு கடந்த முப்பதாண்டு காலத்திற்கும் மேலாக, அன்பின் பரிச்சயம் கிடைத்தாலும், அதன் அரவணைப்புக் கிடைக்காமல் உள்ளூர ஏங்கிக் கொண்டிருந்த ஆயா. மல்லிகாவின் அன்பில் நெகிழ்ந்து குழைந்து மேனியெங்கும் பரவசமாக, ஆனந்தமும், சோகமும் மறைந்து, அவை இரண்டிற்கும் அப்பாற்பட்ட ஞானிகளின் குறிக்கோள்போல் தோன்றும் அடையாளம் கண்டாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/115&oldid=1134196" இலிருந்து மீள்விக்கப்பட்டது