பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

வளர்ப்பு மகள்

காட்ட முடியாத ஒரு பேருணர்வு ஆட்கொள்ளப் பட்டவளாய், விம்மினாள்.

இதற்குள், ராக்கம்மாவும் கந்தசாமியின் மனைவியும், கீழே இருந்த ஸ்டவ்வை எடுத்துத் திண்ணையில் வைத்தார்கள். இட்லித் தட்டை ஒழுங்குபடுத்தி வைத்தார்கள். 'கோணிக் கதவை' கட்டி முடித்தார்கள்.

வீட்டுக்காரி, அவளைத் தடுக்கப் போனாள். கந்தசாமியின் மனைவி 'இனிமே... கொலை விழுண்டி' என்று அதட்டியபோது, வீட்டுக்காரி தெருவுக்கே வந்து, போலீஸ்காரர்களை எதிர்பார்த்து நின்றாள். தெருவெங்கும் கூட்டம்.

போலீஸ் வந்தது. 'வானோடு' வந்தது.

ஒரு போலீஸ்காரர் 'வான்' கதவை முற்றிலும் திறந்துகொண்டு வெளிப்படும்போதே "யாரும்மே... ராக்கம்மா... யாரும்மே தங்கம்மா..." என்று அதட்டினார்.

"நான்தான் ராக்கம்மா..." என்றாள் அந்தப் பெயருக்குரியவள் கம்பீரமாக.

"அந்த அம்மாவை எதுக்குமே அடிச்சே..."

மல்லிகாவிற்கு, விஸ்வரூபம் எடுத்தது போலிருந்தது... கல்லூரி மேடையில் சிலிர்த்து நிற்பாளே அப்படி.

"ஸார்... ஒரு விஷயம்... தெரியாமத்தான் கேக்குறேன். சட்டம் எல்லோருக்கும் சமமுன்னா.... சட்டத்தை அமல் செய்கிறவங்க... எல்லோரையும் சமமாய் நினைக்கணுமுன்னு அர்த்தம்... அவங்க... பணக்காரி... அதனால அம்மா... இவங்க... ஏழை. இதனால 'மே'. ஒருவேளை... பணக்காரியை ஒரு மாதிரியும்... ஏழையை இன்னொரு மாதிரியும் கூப்பிடணுமுன்னு சட்டத்துக்கு 'அமெண்ட்மெண்ட்' எதுவும் வந்திருக்கா... தெரியாமத்தான் கேக்கேன்..."

போலீஸ்காரர்கள், மல்லிகாவைப் பார்த்தார்கள். கம்பீரமாக நின்று ராக்கம்மாவைப் பார்த்தார்கள். பரிதாபமாகப் பார்த்த 'இட்லி' ஆயாவைப் பார்த்தார்கள். இது ஸ்டேஷன்ல கவனிக்க வேண்டிய விவகாரம்... இந்தப் பொண்ணு... இங்கேயே கலாட்டாவை உண்டு பண்ணினாலும் பண்ணிடுவாள்.

முன்கோபி என்று பெயரெடுத்த ஒரு போலீஸ்காரரே, இப்போது சாந்த சொரூபியாகப் பதிலளித்தார்.

"நாங்களும்... மனுஷங்கதாம்மா... விசாரிக்காம எதுவும் செய்யமாட்டோம்... ராக்கம்மா... 'வேன்ல' ஏறு... ஆயா. நீயும் வேன்ல ஏறு..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/116&oldid=1134199" இலிருந்து மீள்விக்கப்பட்டது