பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

103

"எக்ஸ்யூஸ் மி ஸார்... ஆயாவை... இந்த காலைப் பிடித்து வயலண்டா இழுத்ததுல... இதோ பாருங்க... ரத்தத்தை... இதோ பாருங்க... சதை பிஞ்சி வந்துருக்கதை... இந்த ராக்கம்மா மட்டும. சமயத்துல வராட்டால், எங்க ஆயா... கீழே விழுந்து.. போகவேண்டிய இடத்துக்குப் போயிருக்கலாம்... ஆயாவை, பலாத்காரமாய் இழுத்த... இந்த வீட்டுக்கார அம்மாவையும்... நீங்க 'வேன்ல' ஏத்தணும்..."

ஒரு போலீஸ்காரருக்குப் கோபம் வந்தது.

"நீ லிமிட் தாண்டிப் போறேம்மா..."

"நீங்கதான் தாண்டுறீங்க... கொண்டு போறதாய் இருந்தால்... எல்லாரையும் கொண்டு போகணும்..."

"இல்லன்னா..."

"நாங்க... எல்லாரும்... வேனுக்கு முன்னால... நிற்கப் போறோம்... எங்களை பிணமாக்கிட்டு வேணுமுன்னால்... ஒங்க வேன் போகட்டும். இதுல எல்லாருமே ஏளைபாளைங்க... செத்துப்போனால்... தேரெடுக்கக்கூட காசில்லாதவங்க... அதனால... இந்த வேனாலயே... எங்களை மோதிக் கொன்னுட்டு... அப்படியே எங்க பிணத்தையும் எடுத்துப் புதைச்சுட்டுப் போயிருங்க..."

மல்லிகா, சொன்னதுடன் நிற்காமல், வேனுக்கு முன்னால்போய் நின்றாள். இட்லி ஆயா, மெள்ள மெள்ள நடந்து, மல்லிகாவுடன் சேர்ந்து கொண்டாள். கந்தசாமியின் மனைவி, ஓடிப்போய் நின்றாள். தயங்கி நின்றபடி, கைகளை நெறித்துக் கொண்டிருந்த செல்லம்மாவை, சந்திரா தள்ளிக்கொண்டே போய். வேனுக்கு முன்னால் போய் நின்றாள். அந்த வீட்டின் அத்தனைப் பெண்களும், வழிமறிப்பதுபோல் நின்றபோது, வழியெங்கும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பெருங்கூட்டத்தின் ஒரு பகுதியும், வேனுக்கு முன்னால் போய் நின்றது.

போலீஸ்காரர்கள், வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டார்கள். அதாவது, யோசிக்கத் துவங்கினார்கள். ஒருவர். ஒயர்லஸ் மூலம், கமிஷனர் அலுவலகத்திடம் தொடர்பு கொண்டார். 'லத்தி சார்ஜ் பண்ணலாமா' என்பது மாதிரித்தான் கேட்டார். ஆனால் அங்கிருந்து டெப்டி கமிஷனர் வந்து பார்க்கப் போவதாக தகவல் வந்தது. போலீஸ்காரர்கள் முகங்களிலும் கரங்களிலும் முறையே ஈயும், லத்திக் கம்பும் ஆடவில்லை. வேன் முன்னால் நின்ற கூட்டம். நேரம் ஆக ஆக, கம்பீரப் பட்டுக்கொண்டே வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/117&oldid=1134205" இலிருந்து மீள்விக்கப்பட்டது