பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

105

நிலை நாட்டுற போராட்டத்துக்காகப் போடுறதுக்கு பெருமைப்படனும் ஆயா"

வீட்டுக்காரம்மா, பேசாமல் நின்றாள். இன்ஸ்பெக்டர் அண்ணன் பெயரைச் சொல்லி எழுதாமல் இருந்துவிடலாம் என்றுதான் நினைத்தாள். ஆனால் இங்கிதம் தெரியாத ரமணன், அக்காவுக்கு உதவி செய்வதாக நினைத்து, ஒரு காகிதத்தை எடுத்து எதையோ எழுதி, அவளிடம் கையெழுத்துப் போட நீட்டினான்.

மல்லிகா இடைமறித்தாள்.

“ஸார்... ஆயாவோட... திண்ணைக் கடையை ஒன்றும் செய்யமாட்டேன்னு எழுதிக் கொடுக்கச் சொல்லுங்க சார்"

டெப்டி-கமிஷனர் தலையாட்டிக் கொண்டே பேசினார்.

"ஆமாம்மா... அதையும் எழுதிடுங்க... வேணுமுன்னா ஸிவில் கேஸ் போட்டு கடையை எடுங்க.. கிரிமினலா போகாதீங்க..."

வீட்டுக்காரி சார்பில், ரமணன் எழுதமாட்டாது எழுதியதில், ஆயா கடைக்குப் பாதுகாப்பு அங்கீகாரம் கொடுத்து எழுதி முக்கி முனங்கி கையெழுத்துப் போட்டாள்.

டெப்டி-கமிஷனர், அதை வாங்கிக் கொண்டு, ஜீப்பில் ஏறப்போனார். ஆயா பேசாமல் இருப்பாளா?

"போலீஸ் குயந்தைங்கா... என் கையால் சுட்ட இந்த வடையைத் தின்னுட்டுத்தான் நீங்க போகணும்..."

டெப்டி-கமிஷனர் சிரித்துக்கொண்டே சொன்னார்.

"பரவாயில்லை ஆயா... வடைங்கள விற்று... பணம் பண்ணு"

ஆயா. அப்பாவித்தனமாகப் பதிலளித்தார்.

"இனிமேல் யாரும் வாங்க மாட்டாங்க... குயந்தே. நாழியாயுட்டுது."

டெப்டி-கமிஷனர் சிரித்துக்கொண்டே மெதுவடைகளைச் சைகை காட்ட போலீஸ்காரர் அதை பொட்டணமாக்கினார். டெப்டி, ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து. ஆயாவின் மடியில் போட்டுவிட்டு, ஜீப்பில் ஏறினார். வாங்குகிறவர்கள். கொடுத்துவிட்டுப் போவதைப் பார்த்து கூட்டம் ஆச்சரியப்பட்டு, ஆனந்தப்பட்டது.

வீட்டுக்காரி. மாடிக்கு ஓடினாள். சிறிதுநேரத்தில் ரமணனும் பின்னால் ஓடினான். அவனை அவள் திட்டுவது இன்னும் கும்பல் கலையாமல் இருந்த கூட்டத்திற்கு நன்றாகக் கேட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/119&oldid=1134224" இலிருந்து மீள்விக்கப்பட்டது