பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

107

பைக்குள் 'சஸ்பென்சாக' வைத்திருந்த கல்யாண அழைப்பிதழை, பெருமாள் மகளிடம் நீட்டினார். அதைத் தனக்குள்ளேயே படித்த மல்லிகா, அந்த எழுத்தை நம்பாதவள்போல், எழுத்தில்லாத பின்பகுதியைப் புரட்டினாள். ஒரு இளம்பெண்ணும், இளைஞனும் கைகோர்த்து நிற்பது போன்ற படம். 'இளைஞன்' படத்திற்கருகே ஐம்பதைத் தாண்டும், சொக்கலிங்கம் என்ற எழுத்துக்கள். அதற்குக் கீழே 'பேச்சியம்மாள்' என்ற வார்த்தை.

மல்லிகா, அழைப்பிதழை வாயில் வைத்துக் கடித்துக்கொண்டே, யோசித்தாள். பெண் விடுதலை பேசும் இந்தக் காலத்திலா இப்படி? ஒருத்தி, ஏழையாகப் போய்விட்டால், அவளை யாரும் வாங்கலாம் என்பது இன்னும் நடக்குதே மாமா சொத்தைக் காப்பாற்ற நினைத்தால், இந்த பேச்சியம்மாவையே தத்து எடுத்து மகளாய் வளர்க்கலாமே! அப்பாவா இப்படிச் செய்கிறார்? அப்பா அல்ல, அப்போவோட பணம்... பணத்தை, வாலிபமாய் பெண்கள் நினைக்கிறார்கள் என்கிற அகங்காரம் இதைத் தடுத்தே ஆகணும்... தற்காப்பு என்று எண்ண. தற்கொலைக்குச் சமமான ஒரு காரியத்திற்கு உடன்படும் பேச்சியம்மாவைக் காப்பாற்றியாகணும்...

மல்லிகா, அமைதியாக, ஆணித்தரமாகப் பேசினாள்.

"வாங்கப்பா... வக்கீலைப் பார்க்கலாம்."

"எதுக்கும்மா..."

"சொக்கலிங்கத்தோட அரவைமில் என் பேர்ல இருக்கு... மளிகைக்கடை என் பேர்ல இருக்கு... அதோட நான் அவரோட வளர்ப்பு மகள். தத்து எடுக்கதுக்கும் சட்டம் இருக்கு... வாங்கப்பா... வக்கீலிடம் போகலாம்."

செல்லம்மா பதறினாள்.

"மல்லிகா... என்னம்மா. இது?"

"இது உங்களுக்குப் புரியாதும்மா... இது ஒரு இளம்பெண்ணோட விவகாரம். விற்பனைக்கு வந்திருக்கிற ஒருத்தியோட எதிர்காலப் பிரச்சினை... வாங்கப்பா போகலாம். பணம் இருக்கா?"

"கோணி வாங்க ஐம்பது ரூபாய் இருக்கு"

"பரவாயில்ல... நாம பட்டினிகூட கிடக்கலாம். கேணியில் ஒரு பெண்ணை தள்ளப்போவதை... நாம் பார்த்துட்டு நிற்கப்படாது வாங்கப்பா..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/121&oldid=1134226" இலிருந்து மீள்விக்கப்பட்டது