பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு.சமுத்திரம்

111

பேச்சியம்மாவையே பேச்சுக்குப் பேச்சு சொன்னதால், அது முற்றிவிட்ட பைத்தியம் என்பதைக் கண்டுகொண்டாள். சகித்துக் கொள்ளப் பார்த்தாள். ஒருதடவை "என் மகள் மல்லிகா கிட்டேயே போயிடுறேன்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். சொக்கலிங்கம் அவளைப் பிடித்துக் கொண்டார். அவள், மார்க்கெட்டுக்குப் போகும்போதுகூட கடைப் பையன்கள் மூலம் கண்காணித்தார். பார்வதியும் யோசித்தாள். எந்த முகத்தோடு என் மகளிடம் போகமுடியும்? அவளை என்ன பாடுபடுத்திவிட்டேன். அவள் மனம் எப்படிக் கலங்கியிருக்கும். அவள் இங்கே இருந்தால், இப்போ எப்படி இருக்கும்...!

பார்வதி யோசித்துக் கொண்டிருந்தபோது, பின்யோசனை இல்லாமலே, சொக்கலிங்கத்திற்கும் பேச்சியம்மைக்கும் கல்யாணம் நிச்சயமாகி, தேதியும் குறித்தாகிவிட்டது. சட்டாம்பட்டியில் இருந்து, சித்திக்காளி வந்து, வாயெல்லாம் பல்லாகப் பேசி, பணத்தை வாங்கிக் கொண்டு போய்விட்டாள். இனிமேல் பேச்சியைப் பிடித்துக் கொடுக்க வேண்டியதுதான் பாக்கி.

விஷயத்தைக் கேள்விப்புட்ட ராமன் கொதித்தான். ஒருநாள் சின்ன மாமா கடையில், ஏதோ 'தமாஷா' சோடா பாட்டில் வீசினால் சோமாறி மாமன்கள் இப்படியா பண்றது? அந்த 'கிழவன்' இன்னாதான் நினைச்சிருக்கான் ஒரே பூடு பூட்டாத்தான் புத்தி வரும்! எனக்கு சொத்து தாரதாய் சொல்லிட்டு, என்னண்டயே, வேலையைக் காட்டுறர்ன் கஸ்மாலம் என்று கொதித்தெழுந்தான். வயிறுமுட்டக் குடித்துவிட்டு, சொக்கலிங்கத்தின் முன்னால் வந்து கத்தினான்.

"கியவா! அந்தப் பொண்ணோட வயசென்ன. ஒன்னோட வயசென்ன... யோசித்துப் பாரு... அப்பாவிப் பொண்ணை ஏண்டா கெடுக்கிறே. கஸ்மாலம்? மவனே... இப்போ சொல்றதுதான் எப்போ சொல்றதும்... நீ எனக்கு சொத்து தராட்டியும் பரவாயில்லே... பேசாம மல்லிகாவை... கூட்டிக்கினு வா. அவள் எனக்கு வாணாம். ரீசண்டான மாப்பிள்ளையாய் பார்த்து கல்யாணம் செய்து வை. இல்லே... ஏண்டா கஸ்மாலம் பேசமாட்டேக்கே சாவுற வயசுல ஆசயப் பாரு டேய்... ஏய்... டேய்... ஏய்..."

சொக்கலிங்கம் அதிர்ந்து போனார். அந்த ரவுடி சொன்ன வார்த்தை என்னும் சேற்றுக்குள்ளும். மனிதாபிமானம் என்ற செந்தாமரை பூத்திருப்பதைக் கண்டார். வீணான அவப்பெயருக்கு ஆளாகிவிட்டோமே என்று வருந்தினார். அதேசமயம் பேச்சியம்மாவையும் அவரால் மறக்க முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/125&oldid=1134233" இலிருந்து மீள்விக்கப்பட்டது