பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

வளர்ப்பு மகள்

சரவணன், செல்லம்மாவைப் பார்த்தான். அவள். அந்தச் சமயத்திலும். ஊர் வாய்க்குப் பயந்தவளாய் "நாம ரெண்டுபேரும் போகலாம் மல்லிகா" என்றாள்.

மல்லிகா, வெறிபிடித்தவள்போல் கத்தினாள்.

"என்னால்... ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாது. சரவணன் உங்களால் என்னைக் கொண்டுபோய் விடமுடியுமா... முடியாதா... இவ்வளவுதானா நீங்கள்..."

மல்லிகா, வெளியே ஓடினாள் எந்தக் கால்களைப் பிடித்து, தத்தித் தத்தி நடந்தாளோ, அந்தக் கால்களைப் பிடித்துக் கதறவேண்டும்போல் இருந்தது. பெறாமலே பெற்று. கண்படும் என்று கட்டுப்படுத்தியும், கட்டுப்படுத்தினால் துவள்வாள் என்று விட்டுப் பிடித்தும், உயிரிலும் உயிராய் வளர்த்த அப்பாவை, உடனே பார்த்தாக வேண்டும்.

மல்லிகா, தலைவிரி கோலமாக ஓடிக்கொண்டிருந்தாள். அருகே வேகமாக வந்து நின்ற சரவணன் ஸ்கூட்டரைப் பாராமலே ஓடினாள். பிறகு அந்த ஸ்கூட்டர் சற்று முந்திப்போய், வழிமறிப்பதுபோல் நின்றபோது, பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அவனின் தோளைப் பிடித்துக் கொண்டாள். ஆனால், அதில் எந்தவித ஸ்பரிசமும் ஏற்படவில்லை. முதன்முதலாக, கண்னெல்லாம் நிறைந்தவன்மேல் கைபட்ட நாணம் இல்லை. ஓடிக்கொண்டிருக்கும் ஸ்கூட்டருக்கு முன்னால், சொக்கலிங்கம் நின்று கொண்டிருப்பது போன்ற பிரமை இதனால் "பார்த்து... பார்த்து' என்றாள். சொக்கலிங்கம். அந்த ஸ்கூட்டருக்கு முன்னாலேயே ஓடுவது போன்ற இன்னொரு பிரமை, இதனால் "சீக்கிரம். சீக்கிரம்" என்றாள்.

சொக்கலிங்கத்தின் கால் பக்கம், பார்வதி சோகமாக உட்கார்ந்திருந்தாள். "எதுக்கும் ஒரு உயில் எழுதி வச்சிடுங்க' என்று மைத்துனன்மார்கள். சுற்றி நின்று உபதேசம் செய்துவிட்டு. பார்வதியைக் கூட்டிக்கொண்டு வெளியே எங்கேயோ போயிருந்தார்கள். வாசலில் வழிமறிக்கப் பார்த்த நர்சை தள்ளி விட்டுவிட்டு மல்லிகா உள்ளே ஓடினாள்.

"அப்பா... அப்பா.. என் அப்பா!"

மல்லிகா, அப்பாவின் கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டே விம்மினாள். அவர் காலில் தலைவைத்துப் புரண்டாள். கன்னத்தைத் தடவி விட்டுக் கதறினாள்.

"அப்பா... அப்பா.. என் அப்பா!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/128&oldid=1134239" இலிருந்து மீள்விக்கப்பட்டது