பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

115

மேகத்தைக் கீறிய இடியைப்போல், இடியைக் கீறிய மின்னலைப்போல், மின்னலைக் கீறிய ஒளியைப்போல், அவள் தன்னைக் கீறி, தன் இதயத்தையே வெளியே எடுத்து வைப்பவள்போல், "அப்பா... அப்பா..." என்றாள்.

சொக்கலிங்கம், மல்லிகாவின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். “வந்திட்டியாம்மா... வந்திட்டியாம்மா" என்று அவரது வாய், வார்த்தைகளைத் தோற்றுவித்தபோது, அவர் "என்னை விட்டுட்டு... உன்னால எப்படிம்மா இருக்க முடிஞ்சுது? என்னால முடியல... அதனாலதான் இந்த கதி" என்று அவர் அடம்பிடிக்கும் சிறுவனைப்போல கோபமில்லாதக் கோபத்துடன், மிஞ்சுவதுபோல் கெஞ்சியும், கெஞ்சுவதுபோல் மிஞ்சியும், எழுந்து உட்கார்ந்தார். கட்டில் விளிம்பில் சாயப்போன அவரை, மல்லிகா தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.

இதற்குள் உள்ளே வந்த டாக்டர் "கொஞ்சம் பேசலாம் என்று சொன்னால் இப்படியா பேசறது" என்றார். ஆனால், பேஷண்ட் கொலாப்ஸ் ஆகாமல், குத்துக்கல்லாய் ஆனதில் அவரை அப்படி ஆக்கியதில் பெருமைப்பட்டார்.

"மல்லி... மல்லிகா..." என்று சொல்லிக்கொண்டே பார்வதி உள்ளே ஓடிவந்தாள். இருவரில் யார் முதலில் அணைத்தது என்று தெரியாமல், ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்கள்.

"அம்மா... அம்மா..."

"ஏண்டி அழுவுறே... ஏண்டி இப்படி இளைச்சிட்டே... என்னை நினைத்தியா... இனிமேல்... என்னை விட்டுப் போவியா... போவியாடி...?

"அழாதிங்கம்மா... அழாதிங்கம்மா..!"

மீண்டும் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்கள்.

பார்வதி. மகளின் தலையை கோதிவிட்டுக்கொண்டே "டாக்டர் அய்யா! இனிமே ஒங்க மருந்து மாத்திர தேவையில்ல... எங்க பொண்ணு மல்லிகாவப் பார்த்த சந்தோசத்துல இவர் இப்பவே நடப்பார்" என்றார். உடனே டாக்டர் "ஆனந்தத்துலேயும் அதிர்ச்சி வரும்மா" என்றார்.

இதற்குள் பெருமாளும் செல்லம்மாவும் பிள்ளைக் குட்டிகளோடு வந்து நின்றார்கள். பெருமாள். உணர்ச்சிவசப்பட்டு. சொக்கலிங்கத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டு. "எந்தப் பயலுவளோ நீங்கள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/129&oldid=1134242" இலிருந்து மீள்விக்கப்பட்டது