பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

117

கடவுள் தன்னை அலங்கரித்துக் கொண்டாலும், அந்த மாயை எப்படி கடவுளாகாதோ, அதுபோல். அரவைமில்லும் மளிகைக் கடையும் வாழ்க்கைக்குத் தேவையென்றாலும், அவையே வாழ்க்கையாகாது என்பதை மரண விளிம்பில் நின்றபோது புரிந்துகொண்ட சொக்கலிங்கம், அந்தப் பெண்களைப் பார்த்து எதிர் நாற்காலியில் உட்காரச் சொன்னார்.


24

மல்லிகா, ஒரு வாரமும் நர்சிங் ஹோமிலேயே இருந்தாள் அப்பாவுக்கு, ஜூஸ் பிழிந்து கொடுத்தும், கால்களைப் பிடித்துவிட்டும், கைவிரல்களை நெட்டி முறித்தும் கவனித்துக் கொண்டாள். மாலை வேளையில், அப்பாவையும் அம்மாவையும் கூட்டிக்கொண்டு அருகே இருந்த பூங்காவிற்குப் போனாள்.

சொக்கலிங்கம் தேறிக்கொண்டே வந்தார்.

அந்த ஒரு வார காலத்தில், சரவணன் இரண்டு தடவை வந்தான். முதலில் வரும்போது "இந்தா... நீ சொன்னது மாதுரியே... அப்பா டிராப்ட் போட்டிருக்கார். ஸ்டாம்ப் இருக்கிற இடத்தில் கையெழுத்துப் போட்டு வைத்துக்கோ..." என்றான். 'நீங்க'வை. அவன் 'நீ'யாக்கியதில் மல்லிகா தானும் அவனும் ஒன்றானது போல சிரித்தாள்.

மேலும் ஓரிரு நாட்கள் விடைபெற்றன.

வாழ்க்கையில் இருந்து விடைபெறாத அளவிற்கு, நன்றாகத் தேறிய சொக்கலிங்கம், நர்சிங் ஹோமிலிருந்து விடைபெறும் நாள் வந்தது. செட்டியார் காரும், வந்து நின்றது.

பார்வதி, மல்லிகாவிற்கு தலைவாரி. பின்னலிட்டாள். இரட்டைப் பின்னல் கண்ணுக்கு மையிட்டாள். தண்டையார்பேட்டையில் வாங்கிய, நைலக்ஸ் புடவையை கட்டாயப்படுத்தி, கட்டிக்கொள்ள வைத்தாள். மல்லிகாவிற்கு தியாகராயநகர் வீட்டை நினைக்கவே ஆனந்தமாக இருந்தது. எப்போது போவோம் என்பதுபோல் அவசர அவசரமாக பிளாஸ்டிக் கூடையை எடுத்து வைத்தாள். அப்பாவின் சூட்கேசை துக்கி டிரைவரிடம் கொடுத்தாள். தியாகராய நகர் போனதும். 'ஷவர் பாத்'தில் குளிக்க வேண்டும் டி.வி.யைப் போட்டு. கிரிக்கெட் மேட்சைப் பார்க்க வேண்டும்! என்ன... இந்த அப்பா.. இன்னுமா... டாக்டரிடம் பேசிக்கிட்டு இருக்கிறார்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/131&oldid=1134245" இலிருந்து மீள்விக்கப்பட்டது