பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

இந்திர மயம்

சந்திரா. மனிதவடிவ கணினிபோலவே நின்றாள் அவளுக்குள் பதிவான நிகழ்ச்சிகள் வைரஸ்களால் பழுதுபட்டு போனதுபோன்ற மங்கலான பார்வை. நீதிமன்ற பெஞ்ச் கிளார்க் அதட்டியதில், அவள் லேசாக நிமிர்ந்தாள்.. லேசாகத்தான்.

"இது கோர்ட்டு... சாய்ந்தோ... கோணிக்கிட்டோ நிற்கப்படாது. நேரா நில்லு"

ஒலிப்பதிவு தகட்டின் மெல்லிய கீறல்போன்ற நீதிபதியின் முணுமுணுப்பை கட்டளை ஒலிபெருக்கியாக மாற்றிய பெஞ்ச் கிளர்க்கின் சிடுசிடுப்பான வார்த்தைகளால் எந்தத் தாக்கமும் ஏற்படாமல் சந்திரா சரித்துப்போட்ட மேனியில் மடித்துப்போட்ட தலையோடு, வலதுபக்கம் விழப்போகிறவள்போல் நின்றாள். உடனே, மறுமுனையில் நின்று அவளை. காக்கி யூனிபாரச் சேவகர், ஓடோடி வந்து, கண்களை உருட்டியபடியே, கூண்டில் நின்ற மார்த்தாண்டன் அருகே 'சேர்ந்து நில்லு' என்று சொன்னபடியே நகர்த்தினார். நீதிமன்றமாக இல்லாமல் வேறு எந்த இடமாக இருந்தாலும், அவர் சொன்ன வார்த்தைக்கு முன் 'ஏய்' என்ற சொல்லையும் இரண்டாவது சொல்லோடு 'டி' என்ற சொல்லையும் சேர்த்திருப்பார். அவருக்கும் காவல் நிலையத்தில் வேலை பார்த்த அனுபவம் உண்டு.

சந்திரா, தனது இடது பக்கம் ஏதோ தட்டுப்படுவதைக் கண்டு முகம் திருப்பினாள். மார்த்தாண்டன்! அவள் அங்கே இல்லை என்பதுபோல் அசைவற்று நின்றான். அவன் வழியாக அவள் பார்வை, தெற்குப்பக்க சுவரோர பெஞ்சின் நடுப்பக்கம், சுவரில், தலை சாய்த்துக் கிடந்தவள் மேல்பட்டது. ஏதோ ஒரு குச்சியில் தொங்கப் போடப்பட்ட புடவைபோல் அவள் குமைந்துகிடந்தாள். இவள் பார்வை பட்டதும், அந்த புடவை நெளிந்தது. உச்சி முதல் உள்ளங்கால் வரை வெள்ளை சேலையால் மூடிக்கிடந்த உருவத்தில் இரண்டு கண்கள் மட்டும் மகளை துருத்திப் பார்த்தன. அவற்றில் இருந்து நீர்கொட்டி கன்னங்களை மூடிய புடவை குகைக்குள் சங்கமித்தது. தலை பின்பக்கமாய் சுவரில் மோதி மோதி அல்லாடிக் கொண்டிருந்தது.

இந்த சந்திரா. இதே நீதிமன்றத்திற்கு வரும்போதெல்லாம். அம்மா அகப்படுவாளா என்று கண்களை ஏவிவிடுவாள். பிறகு, வெறுமையாக கைகளைப் பிசைவாள். கடந்த நான்கு ஆண்டுகளில் எட்டிப்பார்க்காத தாய்க்காரியை பார்த்ததும் அந்த எந்திர உடம்புக்குள் லேசாய் ஒரு சத்தம் ஏற்பட்டது. இதுவரை ஏன் அம்மா வரவில்லை? அம்மா வந்து இருப்பாள். அண்ணன் தடுத்திருப்பான். இப்போது அவன் குண்டர் சட்டத்தில் சிறையில் இருப்பதாகக் கேள்வி அதனால்தான். அம்மா வந்திருக்காள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/136&oldid=1134338" இலிருந்து மீள்விக்கப்பட்டது