பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

123

சந்திராவுக்கு. அம்மாவை விலைகொடுத்து வாங்க முடியுமா! என்று ஒலிக்கும் ஒரு கிராமிய இசையிலான கவிஞர். பரிணாமனின் நவீனப் பாட்டு அவளுக்காகவே எழுதப்பட்டதுபோல் தோன்றியது. ஆனாலும் அம்மாவின் அவலம் தாங்கமுடியாமல் அவள் மறுபக்கம் கண்களை நிமிர்த்தினாள். மாமியார் அன்னம்மா அவளை பத்திரகாளித்தனமாக பார்த்தாள். இவளுக்கு முன்னாள் தாயாக இருந்தவள்தான். இவளருகே உள்ள முன்னாள் தோழியும் இன்னாள் நாத்தியுமான அனிதா, இவளை வெளியே வா கொன்னுடுவேன் பார்..." என்பது மாதிரி தற்செயலாக வலதுகையை தலைக்கு கொண்டு போவதுபோல் போக்குக் காட்டி, அந்த கையை ஐந்து தலை நாகம் போல் ஆக்கி மைத்துனியை நோக்கி ஆட்டினாள்.

இந்தப் பின்னணியில், அரசாங்க வழக்கறிஞரும், இலவச சட்ட ஆலோசனைக் கமிட்டி வழங்கிய இவளது வழக்கறிஞரும், மரப்பலகையால் போடப்பட்ட தளத்தில் பழைய நாற்காலியில் உட்கார்ந்தபடி, முகம் குவித்த நீதிபதியிடம் மாறிமாறிப் பேசினார்கள். டக்பிடித்த கருப்புக் கோர்ட்டு, பின்பக்கமாய் விரிந்து பிட்டத்தை காட்ட நின்ற அரசு வழக்கறிஞர், நீதிபதி அமர்ந்து இருக்கும் மேடைதளத்தில் ஒரு காலை ஊன்றி, மேசையில் ஒரு கையை மடித்துப்போட்டு பேசினார். இலவச வக்கீலோ, உடம்பை இரண்டாக மடித்துவைத்துக்கொண்டு 'யுவர் ஆனர் .. யுவர் ஆனர்' என்று 'ஆனரில்லாத' குரலில் குளறுபடி செய்துகொண்டிருந்தார்.

நீதிபதி, அவர்களை பின்னோக்கி அனுப்பிவிட்டு, தன்பக்கமாய் எழுந்து நின்று தலையை நீட்டிய பெஞ்ச் கிளார்க்கிடம், ரகசியம் பேசுவதுபோல் பேசினார். உடனே அந்த கிளார்க் சந்திராவைப் பார்த்து, முகத்தை மேல்வாக்காய் உயர்த்திக்கொண்டு ஆணையிட்டார்.

"இந்தாம்மா... சந்திரா...! இந்த கூண்டில் வந்து ஏறி நில்லு..."

சந்திரா, எதிர்முனை கூண்டிலிருந்து இறங்கினாள். இடதுபக்கமாக நடக்கப்போனவள் அம்மாவை பார்த்து விழுந்து விடக்கூடாதே என்ற அச்சத்தில் வலதுபக்கமாக நடக்கப்போனாள். மைத்துனியைப் பார்த்துவிட்டு சிறிது தயங்கினாள். இதற்குள் பெஞ்ச் கிளார்கின் அதட்டல் கேட்டது. உடனே அவள் மாமியாரைச்சுமந்த சுவரோர பெஞ்சுக்கும் கருப்புகோட்டுகள் படர்ந்த நாற்காலி வரிசைகளுக்கும் இடையே உள்ள திடீர் பாதையில் நடந்தாள். புடவைக்குள் சிக்கிய கால்கள் அவளை இலக்கு அறியாமல் தடுமாறவைத்தன. இதையே அவள் நீதிபதிமேல் பாயப்போவதாக அனுமானித்து. இரண்டு பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/137&oldid=1134339" இலிருந்து மீள்விக்கப்பட்டது