பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வளர்ப்பு மகள்

சென்னை, தியாகராயநகரில் உள்ள, ஒய்யாரமான வீடுகளுக்கு இடையே மேக்கப் போட்ட கிழவி போலவும், ‘மேக்கப்’ இல்லாத இளம் பெண்களிலுஷ்ம் 'நாட்டுக்கட்டை' இளம்பெண் போல், ஒரு வீடு காட்சியளித்தது.

பழைய கொத்தனாரும், ‘டிகிரி வாங்கிய’ புதியப் பொறியாளரும் கலந்து ஆலோசித்துக் கட்டி முடித்தது போல் தோன்றிய அந்த வீடு, பழமையாக இல்லாமலும், புதுமையாக போகாமலும், பார்ப்பதற்கு அழகாக இல்லையென்றாலும், பழகுவதற்கு சுவையாகவே இருந்தது.

மேல்மாடியில், மாதச் சம்பளக் குடும்பங்கள் இரண்டு 'குடித்தனம்' புரிந்தன. கீழே, வீட்டின் உரிமையாளர் சொக்கலிங்கம், குடும்ப சகிதமாகக் குடியிருந்தார்.

‘மொசாயிக்’ போட்ட தரை. மின் விசிறிகள் சுழலும் அறைகள், ‘டன்லப்’ பில்லோ கொண்ட ஒரு கட்டில், டி.வி.செட்டு அதேசமயம் பழையன கழிக்கப்படவில்லை என்பதைக் காட்டும் வகையில், இடையிடையே கோணி மூட்டைகளும் பூனைக்குட்டிகளும் தகர டப்பாக்களும் ‘டிரம்’களும் தான்தோன்றித்தனமாகக் கிடந்தன.

மல்லிகா தனது அறையில் இருந்து நெட்டி முறித்து வெளியே வந்து வராண்டாவில் போட்டிருந்த ஊஞ்சல் பலகையில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு, கல்லூரிப் புத்தகத்தையோ அல்லது அந்தப் பாடநூலுக்குள் மறைந்து வைத்திருந்தாலும் வைத்திருக்கக்கூடிய காதல் புத்தகத்தையோ, படிக்கத் தொடங்கினாள். பிறகு போரடித்தவள். போல், ஒரு காலை எடுத்து தரையில் ஊன்றி, விரல்களால் அழுத்தி, ஊஞ்சல் பலகையை ஆட்டிக் கொண்டாள். அந்த ‘ஆடல்’ சுகத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/15&oldid=1133657" இலிருந்து மீள்விக்கப்பட்டது