பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

இந்திர மயம்

மறுக்கலையான்னு ஒரேவார்த்தையில் சொல்ல வேண்டியதுதானே? ஒரு வார்த்த சொல்றதுக்கு இவ்வளவு நேரமா?"

நீதிமன்றப் பிரக்ஞைக்கு வந்த சந்திரா கட்டுமீறிப்போன வேகவேகமான வெடிக் குரலில், யந்திரம்போல் "மறுத்தேன். மறுக்கத்தான் செய்தேன். இப்போ அதுக்கு என்ன" என்று நீதிமன்றமே குலுங்குவதுபோல் கத்தினாள். போலீஸ்காரர்கள் நீதிபதிக்கு காவலாக இலைமறைவு காய்மறைவாக நின்றுகொண்டார்கள். "சிறையில் இவளை செமத்தியாக கவனிக்கச் சொல்லவேண்டும்" என்று ஒரு பெண் சப்இன்ஸ்பெக்டர் நினைத்துக்கொண்டதுபோல் தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.

சாய்ந்து உட்கார்ந்திருந்த நீதிபதி நிமிர்ந்தார். இப்போது கேட்கப் போகும் கேள்வி முக்கியமான கேள்வி. அதைச் சரியாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக ஏற்கனவே எழுதி வைத்த கேள்வியை மீண்டும் சரிபார்த்துக் கொண்டு கேட்டார்.

"உங்களுக்கும்... இரண்டாவதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மார்த்தாண்டனுக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் கொலை நடந்த நாளில், உங்கள் இருவரையும் கையும் களவுமாய் கண்டுபிடித்த உங்கள் கணவர் கோபாலை, நீங்கள் இருவரும் சேர்ந்து கொன்று விட்டதாகவும் உங்கள் மாமனார் அருணாசலம். மாமியார் அன்னம்மா நாத்தினார் அனிதா பாண்டியன் சாட்சியம் அளித்து இருக்கிறார்கள் இது உண்மையா, பொய்யா?"

சந்திரா, கழுத்தில் மீண்டும் மடித்து போடப் போன தலையை பின்பக்கமாய் சாய்த்து பிடரி முனையில் சாய்த்து வைத்துக் கொண்டாள். அவளை சரி செய்யப் போன பெஞ்ச் கிளார்க்கை நீதிபதி கண்ணசைவு மூலம் சரிப்படுத்தினார். ஏற்கனவே வாய்தாக்களை வாங்கிக் கொண்ட சாராயக்காரர்களும் இதர வாதி, பிரதிவாதிகளும் அவளைப் பார்த்தபடியே நின்றார்கள். அவர்களில் சிலர் வெளியே போய் அங்கே நின்ற தங்களது நண்பர்களையும் இழுத்து வந்தார்கள்.

சந்திரா. தன் குரல்வளையை கைகளால் அழுத்தியபடியே கடந்த காலத்தை முன்னோக்கி இழுத்தும் நிகழ்காலத்தை பின்நோக்கி நகர்த்தியும் பொருத்திக் கொண்டாள். அதே சமயம் எதிர்காலத்தைப் பற்றி கவலையற்றவள்போல் மீண்டும் அந்த கொடூர நிகழ்ச்சியில் பங்காளியாகவும், பார்வையாளியாகவும் மூழ்கிப் போனாள்.

மாமியாரோடு படுத்துக் கொண்டிருந்த சந்திராவை மாடிக்கு அனுப்ப மாமியார் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. இதனால் அந்தக் குடும்பமே பேமிலி கோர்ட்டானது. இவள், மூன்று மாத காலம் அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/156&oldid=1134595" இலிருந்து மீள்விக்கப்பட்டது