பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

145

சந்திரா ஒப்பாரியாய் சொன்னாள். போலீஸ் பெண்கள் பிடித்து வைத்த இரண்டு கைகளையும் தூக்கித் தூக்கி ராட்டிணம் போல அவர்களை சுழலச் செய்தாள். பின்னர் மாறி மாறி ஒப்பித்தாள்.

நானா செய்யல்லையே. தானா நடந்துட்டே...எனக்கு எதுவும் தெரியலையே... தெரியலையே...

நீதிபதியின் மெல்லிய வார்த்தைகளை பெஞ்ச் கிளார்க் உரத்த குரலாக்கினார்.

"சரியாக மூன்று மணிக்கு கோர்ட் கூடும்".


6

அந்த நீதிமன்றம் நீதி கலைந்து அம்மணமாகத் தோன்றியது. நீதிமன்ற அலுவலர்கள் சாப்பிடப் போய்விட்டார்கள். காவலர்களில் பெரும்பாலோர் மாமூல் கைதிகளோடு பேசிக் கொண்டு வெளியே போய்விட்டார்கள். மிச்சம் மீதியாக சந்திராவும். அவளுக்கு பாதுகாப்பாக அல்லது பாதுகாப்பை மீறாமல் இருப்பதற்காக ஒரு பெண் போலீஸ், சப்-இன்ஸ்பெக்டர், பெண் காவலர்களை சாப்பிடுவதற்கு எதையாவது வாங்கி வரச் சொல்லிவிட்டு இவள் சந்திராவின் அருகே எரிச்சலோடு உட்கார்ந்து இருந்தாள்.

இவர்களின் எதிர்ப்பக்கம் சந்திராவின் தாய்க்காரி எழுந்து நின்றாள். மார்த்தாண்டன், ஒரு போலீஸ் காவலோடு, ஒரு டெஸ்க் பெஞ்சில் தலை கவிழ்ந்து கிடந்தான்.

நீதி பரிபாலன மேடையின் பின்புறச் சுவரின் மேல்பக்கம் பொருத்தப்பட்ட கடிகாரத்தின் அடிவாரத்தில் பதுங்கிக் கிடந்த ஒரு பல்லி வெளிப்பட்டது. சரியாக எதிர்ப்பக்கம் வலைகட்டி அதன் மையப் புள்ளியாகக் கிடந்த சிலந்தியைப் பார்த்தோ அல்லது தற்செயலாகவோ அந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு ஒரே கொண்டாட்டம். பல்லி, கரப்பான் பூச்சியைப் பிடித்து உயிரோடு தின்பதைப் பார்த்து இருக்கிறாள். இப்பொழுதுதான் ஒரு பல்லி பூச்சி கொல்லியான சிலந்தியின் பக்கம் போவதைப் பார்க்கிறாள். சிலந்தி வலைக்குள் பல்லி சிக்குமா அல்லது பல்லியின் வாய்க்குள் சிலந்தி சிக்குமா?

அந்தச் சமயத்தில் சந்திராவும் அவளது தாயும் நீதி மேடைக்கு முன்னால் நட்ட நடுவில் மோதிக் கொள்வது போல். ஒருவரை ஒருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/159&oldid=1134602" இலிருந்து மீள்விக்கப்பட்டது