பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

இந்திர மயம்

அவமானப் படுத்தப் பட்டது அவமானம் ஆகாது. எதேச்சையானதோ, தற்காப்போ கொலை ஆகாது. நடந்ததை நடந்தபடி சொல்லும்மா. இன்னும் நீதி இருக்கத்தாம்மா செய்யுது. உனனை மாய்க்க உனக்கு உரிமை இருக்கலாம். ஆனால் அந்த அறியாப் பையனை மாய்க்க உனக்கு உரிமையில்லை."

இதற்குள் பல்லி- சிலந்தி தாவாவை, பார்ப்பதை பாதியில் விட்டு விட்டு அந்த பெண்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெளியே ஓடி வந்து சந்திராவை அடிப்பது போல கையைக் கம்பு போல் வைத்துக்கொண்டு திட்டினார்.

"என் கிட்ட சொல்லாம எப்படி நீ வெளியில வரலாம். கூண்டுல பதிவிரதை மாதிரி இருந்துட்டு. இப்ப என்னடான்னா... கோர்ட் கூடப் போகுது உள்ள வாடி"

அந்தப் பெண், போலீஸ்காரி, மார்த்தாண்டனையும், அவனை தோழமையோடு பார்த்துக் கொண்டு நின்ற கூட்டத்தையும் எரிச்சலோடு பார்த்துவிட்டு சந்திராவின் கையைப் பிடித்து மீண்டும் 'வாடி' என்றாள். கூட்டத்தினர் கோபப்பட போனார்கள். சந்திரா முந்திக் கொண்டாள். முதல் தடவையாக முழுமையான விடுதலை அடைந்தவள் போல் பேசினாள்.

"மரியாதை கொடுத்து மரியாதை வாங்கும்மா. உங்க வாடி, போடியை சாராயக்காரிகள் கிட்ட வைத்துக்கோ."

சந்திரா, அந்த போலீஸம்மாவின் கையை உதறிவிட்டு, நீதிமன்ற வாசலுக்குள் அழுத்தமாக நுழைகிறாள். அசந்து போன அந்தப் பெண் போலீஸ்காரம்மா, அவளைப் பின் தொடர்கிறாள். சந்திராவோ சிலுவையிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசு பிரானின் இன்றையப் பெண்ணியப் போராளியாக நீதிமன்ற உள் வளாகத்திற்குள் நடைமேல் நடையாய் நடக்கிறாள்.

நீதிமன்ற மேல்சுவரில் வலைக்குள் மையமாக இருந்த சிலந்தி அந்த வலைக்குள் நுழைந்த பல்லியை பார்த்து பயந்துவிட்டது. வலையை சிதைத்து விட்டு எதிர் திசையில் ஓடியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/162&oldid=1134605" இலிருந்து மீள்விக்கப்பட்டது