பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

5

அடிக்கணுமுன்னு சொல்லுங்க... குனியுறேன். கன்னத்துல முத்தங் கொடுக்கணுமுன்னால், முகத்தை நிமிர்த்துறேன். ஆனால் நகை போடுறதுக்கு கழுத்தையோ கையையோ நீட்டமாட்டேன். போங்கம்மா... எனக்கு இதெல்லாம் பிடிக்காது..."

"உனக்கு பிடிக்காட்டால் போகட்டும்... எனக்குப் பிடிக்கிறதுக்காவது போடக்கூடாதா. இன்னைக்கு மட்டும் போட்டுக்க ராசாத்தி..."

"இன்னைக்கு மட்டும் என்னை விட்டுடுங்க... ப்ளீஸ். இதுங்கள நீங்களே போட்டுக்குங்க... உங்க அழகை எடுப்பாக் காட்டும்."

பார்வதி யோசித்தாள்.

கணவனிடம் இருந்து இதுவரை வராத, "அழகு. எடுப்பாய் இருக்கும்" என்பன போன்ற வார்த்தைகளின் வசீகரங்களில் சிக்குண்ட பார்வதி, மல்லிகாவுக்கு என்றே செய்யப்பட்ட நகைகளில் பெரும்பாலானவற்றை எடுத்துப் போட்டுக்கொண்டாள். தோளும், கழுத்தும் தொடும் இடத்தில் இருந்து, கிட்டத்தட்ட குரல்வளை வரைக்கும், நகையடுக்குகள்.

இதற்குள், குளியலறையில் இருந்து, "ரெடியாயிட்டீங்களா" என்று கூவிக்கொண்டே வந்த சொக்கலிங்கம், மனைவியைப் பார்த்து கிண்டலடித்தான்.

"இந்த ரெண்டு கம்மலையும் கழட்டிட்டு அவளோட ரிங்கை போட்டுக்கோயேன்... கொப்பரைக்கு வளையம் போட்டது மாதிரி இருக்கும். வேணுமானால் காம்பவுண்டு கதவுச் சங்கிலியைக் கழட்டித் தரட்டுமா... அதையும் தங்கச் சங்கிலி மாதிரி போட்டுக்கோ. ஆளைப் பாரு! நாற்பது வயதுக்குமேல உடம்பைக் குறைக்கதுக்கு பார்க்காமல், நகைகளை கூட்டப் பார்க்காள்..."

"நான் வேணுமானால் தடியா இருந்துட்டுப் போறேன். உங்களுக்கு என்ன நஷ்டம்? ஏண்டி இப்படிச் சிரிக்கிற?"

சிரிக்கலம்மா அப்பா. அம்மாவை நீங்கள் ஓவரா பேசுறீங்க."

"நாம இப்போ அவரு கண்ணுக்கு அப்படித்தாண்டி தெரியும்! இவரு இவ்வளவு பேசுறாரே. இவரு காலப்பாரு, குளிச்சாராம், காலுல தண்ணியே படல..."

"தண்ணி போடுற உன் ராமனைவிட நான் தேவலடி."

"என்னப்பா நீங்க. அம்மா அக்கறையோடு பேசுறாங்க. நீங்கள் சீரியசா எடுத்தா எப்படி?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/19&oldid=1133662" இலிருந்து மீள்விக்கப்பட்டது