பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

வளர்ப்பு மகள்

"விளையாட்டு வினையாகுமுன்னு சொல்லுடி."

"வினைகூட என்கிட்டே விளையாட்டாகுமுன்னு சொல்லும்மா..."

"நான் ஒண்னும் சொல்லப் போறதுல்ல. அதோ, கார் வந்துட்டு. போயிட்டு சீக்கிரமா வந்துடணும்..."

மூவரும் காரில் ஏறினார்கள்.

மல்லிகா இருவருக்கும் நடுவில் உட்கார்ந்து கொண்டாள்.

உரித்த வாழைத்தண்டு போன்ற கால்கள். ஆமணக்குச் செடியைப் போன்ற சிவப்பும் ஊதாவும் 'கலந்த' நிறம். அது ரத்தச் சிவப்பும் இல்லை. குங்குமச் சிவப்பும் அல்ல. அழகான சிவப்பு. தாமரைத் தண்டு போன்ற கழுத்து, நளினமும், கம்பீரமும் கலந்த பார்வை. எவர் சொல்வதையும், உண்மையிலேயே உன்னிப்பாகக் கேட்பதுபோல், முதுகை வளைத்து, முகத்தை முன்பக்கமாய் கொண்டு வரும் நேர்த்தி. குட்டையென்றோ, நெட்டையென்றோ சொல்ல முடியாத உயரம். பல்வேறு டிசைன்கள் போட்ட அந்த 'மோஷி மோஷி' சேலையில், இரட்டைப் பின்னல்களில் ஒன்று தோளின் முன்பக்கம் தொங்க, சேலைக் கடையின் முன்னால் நிற்கும் மெழுகுப் பெண்ணைப்போல, அதேசமயம், ஆபாசம் இல்லாத கவர்ச்சியுடன், பாலுணர்வைத் தூண்டாமல், கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்பது போன்ற பாங்குடன் மல்லிகா தோன்றினாள். அவளையே இமை விலகப் பார்த்த திரு-திருமதி சொக்கலிங்கங்கள், ஒருவருக்கு ஒருவர் புன்முறுவலைப் பரிமாறிக்கொண்டே, புளகாங்கிதமானார்கள்.

டிரைவர் எஞ்ஜினை 'ஆன்' செய்தபோது, ராமசாமி வந்தார். பார்வதியின் பெரியண்ணன். அந்த உறவுக்கு ஏற்ற உருவம் உருவத்திற்கு ஏற்ற பணம் உள்ளவர். பணத்திற்கு ஏற்ற 'பாவலா' மனிதர்.

"கல்யாணத்துக்குப் புறப்பட்டாப் போல இருக்கு?"

சொக்கலிங்கம் முகத்தைச் சுழித்தார். காலங்காத்தால வந்துட்டான்! இவன் வாடை பட்டாலே, மூச்சு முட்டும். இனிமேல் போன காரியம் உருப்பட்டாலத்தான்!

'அண்ணன் கேட்டதுக்கு எதாவது சொல்லுங்களேன்' என்பது மாதிரி. பார்வதி, கணவனின் இடுப்பை ரகசியமாக இடித்தபோது, சொக்கலிங்கம், தன் மூத்த மைத்துனருக்குப் பதில் சொல்லும் கட்டாயத்திற்கு உட்பட்டார். கனகச்சிதமாகவே பதில் சொன்னார்.

"பின்ன என்ன மச்சான்... உங்க தங்கச்சி இவ்வளவு நகை நட்ட சுமக்க முடியாம போட்டிருக்கும்போது. நான் இந்தப் பட்டு வேட்டியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/20&oldid=1133663" இலிருந்து மீள்விக்கப்பட்டது