பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

7

கட்டியிருக்கும்போது நல்ல காரியமான கல்யாணத்துக்குத்தான் போவோம். கருமாந்தரத்துக்கா போவோம்?"

ராமசாமி சளைக்கவில்லை.

"அடடே... நம்ப மல்லிகா அக்காவோட கல்யாணமா? எனக்கு மறந்தே போயிட்டு நானும் கார்ல ஏறிக்கிறேன்."

"முடியாது சாமி... நாங்க வழில ஓர் இடத்துக்குப் போயிட்டு வரப்போறோம். நீங்கள் முன்னால போய் அங்க இருக்கவங்களுக்கு கொஞ்சம் ஒத்தாசை பண்ணுங்க. டிரைவர் அவரு மறிச்சிக்கிட்டு நிற்கிறாரேன்னு யோசிக்க வேண்டாம் வண்டியை எடு. அவரு தானா துள்ளுவாரு வண்டிக்கு சேதம் வருமேன்னு பார்க்கியா? சீக்கிரமாய் விடுப்பா..."

கார் சீறிக்கொண்டு புறப்பட்டது. ராமசாமி, அப்போதைக்கு ஒதுங்கிக் கொண்டார்.

பார்வதியால் தாளமுடியவில்லை. மல்லிகாவை விட்டு சிறிது விலகி உட்கார்ந்துகொண்டே, "எங்கள் அண்ணங்கன்னால் ஏன் உங்களுக்கு இப்படி பற்றி எரியுது?" என்றாள்.

"வத்தி வச்சால் பற்றித்தான் எரியும்."

"உங்கள் தங்கை புருஷனைவிட எங்க அண்ணன் தம்பிங்க மோசமில்ல. கல்யாணம் நிச்சயிக்கறதுக்கு முன்னால, உங்கள்கிட்ட பெண்ணுக்குத் தாய்மாமனாச்சேன்னு, 'இந்த இடம் பிடிக்குதா அத்தான்னு' ஒரு வார்த்தை கேட்டாரா? சரி. கேட்கல. கல்யாண நோட்டிசை நேரிலயாவது வந்து கொடுத்தாரா? சரி. கொடுக்கல. கல்யாண வீட்ல யார் யாருல்லாமோ வாழ்த்துரையோ மண்ணாங்கட்டியோன்னு போட்டிருக்கே, உங்கள் பெயரையும் போடுறது? சரி போடல. பெண் வீட்டார்னு சொல்லி. ஏறிட்டுப் பாக்காத அவரோட அண்ணன்மாருங்க பெயருங்களை போட்டிருக்காரு... பிள்ளைகளோட பெயருங்களை போட்டிருக்காரு... தாய்மாமா பெயரை ஏன் போடல? இவள் பெயரைக்கூட போட்டிருக்காரு. இவளை எடுத்து வளர்த்த உங்கள் பேரு எங்கேயாவது இருக்கா? ஏன் பேச மாட்டேங்கிறீங்க? அரவ மிஷின் மாதிரி கத்துவீங்களே. இப்போ ஏன் பேசமாட்டேங்கிறீங்க?"

சொக்கலிங்கம் பட்டும் படாமலும் பதிலளித்தார்.

"இதனால அவங்களுக்குத்தான் நஷ்டமே தவிர நமக்கில்ல. நாலு பேரு நாலு விதமாய்ப் பேசப்படாதேன்னு போறோம். அவ்வளவுதான். உங்க அண்ணன்மாரு தாழ்த்தின்னோ இல்லை என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/21&oldid=1133664" இலிருந்து மீள்விக்கப்பட்டது