பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

வளர்ப்பு மகள்

மச்சான் உசத்தின்னோ எதுவும் கிடையாது. எல்லாருமே காலச் சுத்துன பாம்புங்க. டிரைவர்! நீ ஏய்யா நாங்க பேசுறதக் கேட்கிறது மாதிரி வண்டியை மெதுவா விடுற? சீக்கிரமா விடுப்பா. இன்னொண்ணும் சொல்றேன், கேளுடி அண்ணன் தம்பிங்களானாலும் சரி... அக்கா தங்கைகளானாலும் சரி. அம்மா வயித்துல இருந்து ஒருவரோடு ஒருவர் சொல்லிட்டுப் பிறக்கல. ஒண்ணா பிறக்குறதுனாலேயே ஒண்ணா ஆயிட மாட்டாங்க, கூடப் பிறக்கறதுனாலேயே கூடி வாழ்ந்துட மாட்டாங்க. உறவைவிட நட்பு இருக்கே, அதுலயும் பால்ய சிநேகிதம் இருக்கே, அதுக்கு இணையாய் எதுவும் ஆக முடியாது. சொந்தக்காரங்கிட்ட உடம்புல ஒடுற ரத்தம் துடிக்கலாம். ஆனால், சிநேகிதங்கிட்ட அந்த உடம்புக்குள்ள இருக்கிற ஆன்மா துடிக்கும். இந்தச் செட்டியாரையே எடுத்துக்கோ. அவரு எங்கே பிறந்தாரோ, நான் எங்கே பிறந்தேனோ, அவரு செட்டியார்ல நாட்டுக்கோட்டையா, வாணியச் செட்டியா, வளையல் செட்டியான்னு கூட எனக்குத் தெரியாது. இருந்தாலும், அவரைவிட, எனக்கு நெருக்கமான மனுஷன் யாருமே இல்ல."

"ஆயிரம் சொல்லுங்க, என்கூடப் பிறந்தவங்க... உங்கள் தங்கை புருஷன் மாதிரி நடக்க மாட்டாங்க. எங்கள் அண்ணனை நாயை நடத்துறதவிட மோசமாய் நடத்துனீங்க கார்ல ஏறப்போனவரக்கூட முகத்துல அடிச்சதுமாதுரி பேசுனீங்க. அப்போகூட அவரு கோபப்பட்டாரா? சிரிக்கிறத விட்டாரா..?"

"கோபப்பட வேண்டிய இடத்துல சிரிக்கிறவன் ஆபத்தான மனுசண்டி, அதோட, ரோஷம் இருந்தால்தான் கோபம் வரும். வேஷம் இருந்தால் சிரிப்புத்தான் வரும்."

"சரி சாமீ! எங்கள் ஆட்கள் ரோஷங்கெட்டவங்கதான். ஆபத்தானவங்கதான். இவள் அப்பாதான் ரோஷக்காரர் - யோக்கியர். போதுமா..?

"உனக்கு அறிவு இருக்காடி? இவள் நம்ம பொண்ணு, நம்மைத் தவிர வேற யாரையும் நினைக்காத பொண்ணு, நம் மடியிலேயும், தோளுலேயும் புரண்ட பொண்ணு. இவளையும் அந்தக் குடிகாரனையும் எதுக்காகடி சம்பந்தப் படுத்திப் பேசுற? பாரு, அவள் முகம் போற போக்க..."

பார்வதி. அப்போதுதான் உணர்ந்தவள்போல் திடுக்கிட்டு, மல்லிகாவைப் பார்த்தாள். அவள் அருகே நெருங்கி உட்கார்ந்துகொண்டு அவளை தனது வலத்தோளில் படும்படியாய் அணைத்துக் கொண்டாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/22&oldid=1133665" இலிருந்து மீள்விக்கப்பட்டது